அரசு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்கள்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அனைத்து நவீன வசதியுடன் அரசு மருத்துவக் கல்லூரியை இந்திய பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கடந்த மாதம் திறந்து வைத்தார். அப்போதே இந்த ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு கற்பதற்கு ஏதுவான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சூழல் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது வகுப்பறை வளாகங்கள், செயல் முறை பயிற்சி ஆய்வு கூடம், பேராசிரியர்கள் அறை, மருத்துவ நூல்கள் அடங்கிய நவீன நூலகம், கூட்டு நுண்ணோக்கி ஆய்வகம், உணவு விடுதி வளாகம், உடற்பயிற்சி கூடம், கலையரங்கம் ஆகியவற்றின் வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பிறகு இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது கலந்தாய்வு மூலம் ஒரு சில மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக தொற்று பாதிப்பை கண்டுகொள்ளாமல் தேர்தல் அரசு அறிவித்துள்ள நிலையில், தேர்தல் முடிந்த பிறகு கட்டுப்பாடுகளை அதிகரிக்கபடுமா என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு தொற்று பாதிப்பு அதிகமான மாநிலங்களில் தேர்தல் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.அப்போது, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி வத்சன் உள்பட பேராசிரியர்கள், மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.