உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் விதி மீறல், கொரோனா பெருந்தறெ்று விதிமீறல் சம்பந்தமாக
திமுக
இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான
உதயநிதி ஸ்டாலின்
மீது மாநில தேர்தல் ஆணையத்தில்
அதிமுக
புகார் அளித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்
பாபு முருகவேல்
அளித்துள்ள புகாரில், மாநில தேர்தல் ஆணையத்தின் செய்தி அறிக்கையின்படி, 11.2.2022 வரை எந்த கட்சியும் சாலையில் பொதுமக்களை கூட்டி கூட்டம் நடத்துவதற்கும், பேரணி நடத்துவதற்கும், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன ஊர்வலம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த சுற்றறிக்கை வெளிப்படைத் தன்மையோடு தேர்தல் ஆணையத்தின் சமூகவலைத்தள பக்கத்திலும் பதிவேற்றம் செய்யபட்டு இருப்பதாக சுட்டுக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் இதை ஆட்சி அதிகாரம் தன் கையில் இருக்கிறது என்ற காரணத்தினால் உதயநிதி ஸ்டாலின் 9.2.2022 அன்று திருச்சி மற்றும் கரூரிலும் 10.2.2022 அன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலும் அப்பட்டமான தேர்தல் விதிமீறலாக நூற்றுக்கணக்கான மக்களை நெடுஞ்சாலையில் கூட்டி பெருந்தொற்று சட்டத்தை மீறுகின்ற வகையில் பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அந்த இடத்தில் குழுமியிருந்தார்கள். அவர்கள் மத்தியில் தேர்தல் பரப்புரையை உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டார் என்று அந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொங்கு கலாட்டா: திமுக கூடாரத்தில் வேலுமணி; ஸ்வீட் பாக்ஸ் நம்பிக்கையில் செந்தில் பாலாஜி!

இந்த தேர்தல் பரப்புரையானது சட்டத்திற்கு உட்பட்டு அல்லது முறையான அனுமதியைப் பெற்று நடந்திருக்க வாய்ப்பில்லை மாறாக அனுமதி பெற்று இருப்பார்களேயானால் அவ்வாறு அனுமதி பெற்றவர்கள் மீதும், அந்த அனுமதியை வழங்கிய வழங்கிய திருச்சி, கரூர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் இந்த சட்ட விதி மீறலுக்கு பொறுப்பாவார்கள் என்றும் அந்த புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே ஆட்சி அதிகாரம் தங்களின் கையில் இருக்கிறது என்ற காரணத்தினால் பெருந்தொற்றில் மக்கள் அவதிப்பட கூடிய இந்த சூழ்நிலையில் அப்பட்டமான தேர்தல் விதி மீறல் ஆகும். அப்பட்டமான பெருந்தொற்று சட்ட விதி மீறல் ஆகவும் இது பார்க்கப்படுகிறது. இவ்வாறு தேர்தல் விதி மீறிய பெருந்தொற்று சட்டத்தை பின்பற்றாமல் அந்த விதியை மீறிய உதயநிதி ஸ்டாலின் மீது உடனடியாக தேர்தல் விதியின் படியும், இந்திய தண்டனை சட்டத்தின் படியும் உரிய வழக்கு தொடுக்க வேண்டும் என்றும், அந்த நெடுஞ்சாலை கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய திருச்சி, கரூர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மீதும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மீதும் அதே சட்டங்களின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாநில தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து மனு வழங்கியிப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்திருப்பதாகவும் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.