கோவை: கொரோனா 3வது அலையின் மத்தியிலும் கோவை அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா 3ஆம் ஆலை தாக்கம் அதிகமாக இருந்த ஜனவரி மாதத்தில் 650 பிரசவங்கள் நடைபெற்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 173 தாய்மார்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, 81 பேருக்கு பிரசவமும் பார்க்கப்பட்டது. தீவிர சிகிச்சை தேவைப்பட்ட 50 பேர் சிகிச்சை முடிந்து, நலமுடன் வீடு திரும்பினர். கர்ப்பகால ரத்த கொதிப்பு சார்ந்த அபாயங்களோடு 6 பேரும், இருதய கோளாறுடன் அனுமதிக்கப்பட்ட 5 பேரும் குணமடைந்தார். தனியார் மருத்துவமனைகளில் இருந்து கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டோரும், திருப்பூர், கோபி, சத்தி, பொள்ளாட்சி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்தும் அதி தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சை வேண்டி அனுப்பி வைக்கப்பட்டவர்களும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம் ஜனவரியில் மகப்பேறு இறப்பு இல்லாத நிலையை அடைய வேண்டும் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது.
