தமிழகத்தில் பிப்.26 புத்தகமில்லா தினம் கடைபிடிப்பு; புத்தகங்களை விடுத்து அனுபவம் மூலம் வாழ்க்கை கல்வி கற்க ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு புத்தகப்பை கொண்டு செல்லாத நாள் பிப்ரவரி 26 அன்று கடைபிடிக்கப்பட உள்ளது. மாணவர்களின் மன அழுத்தங்களை நீக்கக்கூடிய வகையில் பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கும் வகையிலும், மன அழுத்தங்களை குறைக்கும் வகையிலும் இந்த புதிய திட்டமானது அறிமுகப்பட்டுள்ளது. வரும் 26 ஆம் தேதி No Bag Day என்று அழைக்கப்படும்  புத்தகப்பை இல்லாத நாள் செயல்பட உள்ளது. அந்த நாளில் வாழ்க்கைக்கு தேவையான கல்வி, வாழ்க்கையின் நிலையான அனுபவம் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காக மாணவர்களுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அன்றைய தினம் மாணவர்கள் பாட புத்தகங்களை பள்ளிகளுக்கு கொண்டு வர அவசியமில்லை; மேலும் அன்று எந்த பாடமும் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்திற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல் 10 மணி வரை, இந்த திட்டத்தினுடைய முக்கிய நோக்கம் என்ன? பாடத்தை தவிர்த்து இந்த வாழ்க்கை முறை கல்வி(Value Education) என்ற அடிப்படியில் என்னென்ன விஷயங்கள் எல்லாம் இருக்கிறது என்பது குறித்து ஆசிரியர்கள் விளக்கம் அளிப்பர். பின்பு, 10 முதல் 11 மணி வரை பாரம்பரிய கலைகள், விவசாயம், மூலிகை தோட்டம், மாடித்தோட்டம் என்பதை குறித்து ஒரு புரிதலை நேரடியாகவோ அல்லது எழுத்து மூலமாக மாணவர்களுக்கு விளக்குவார்கள். அதேபோல் 11.30 க்கு பிறகு கைவினை பொருட்கள் குறித்து அறிமுகம் செய்யப்படும். மதியம் 2 மணிமுதல் 2.45 மணி வரை கல்வியாளர்கள் அல்லது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களை கொண்டு பெண்கள் குறித்த பாதுகாப்பு, பெண்கள், குழந்தைகள், நுகர்வோர்கள் உள்ளிட்டவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கான சட்டதிட்டங்கள் என்னவாக உள்ளது என்பதை பற்றி எல்லாம் மாணவர்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மாலை 3 மணி முதல் 3.30 வரை தேசிய அளவில் விருது பெற்ற பள்ளி மாணவர்களுக்கான குறும்படம் காட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்திய பிறகு, பின்னூட்டங்களை கவனமாக சேகரித்து அவற்றை ஆவணப்படுத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.                           

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.