திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனத்தின்போது வெள்ளி உண்டியல் கலசம் விழுந்ததில் பெண் பக்தர் அவரது குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பினர். திருத்தணி முருகன் கோயிலில் நேற்றுமுன்தினம் தை கிருத்திகை என்பதால் ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு திருத்தணி அருகே உள்ள ஆர்கே பேட்டையை சேர்ந்த பெண் பக்தர் தன்னுடைய குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். இவர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு உற்சவர் மண்டபத்தில் காலியாக இருந்ததால் குடும்பத்துடன் அமர்ந்திருந்தனர். சண்முக உற்சவர் தரிசனம் செய்துவிட்டு ஏராளமான பக்தர்கள் முண்டியடித்து ஓடியுள்ளனர். அந்த மண்டபத்தில் சுமார் 200 கிலோ எடைகொண்ட 6 அடி வெள்ளி உண்டியல் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.இந்த உண்டியலில் பக்தர்கள் தங்கள் காசு, நகைகள் மற்றும் பல்வேறு காணிக்கைகளை செலுத்திக் கொண்டிருந்தனர். சண்முக உற்சவர் தரிசனத்தன்று கூட்டம் அதிகமாக இருந்தது, அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பக்தர்கள் முண்டியடித்த காரணத்தால் இரவு 9 மணியளவில் கீழே வெள்ளி உண்டியல் சாய்ந்தது. இதில், உண்டியல் மேல் இருந்த கூர்மையான கலசம் அங்கே அமர்ந்திருந்த பெண் பக்தர் மீது குத்தியது. இதில் அதிர்ஷ்டவசமாக அங்கே அமர்ந்திருந்த பெண் பக்தர், அவரது குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
