புதுச்சேரி வந்த போது பேருந்தில் தவறவிடப்பட்ட குழந்தை சென்னை தம்பதியிடம் ஒப்படைப்பு

புதுச்சேரி: சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி சரஸ்வதி (45). இவர் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வருவதற்காக நீலாங்கரையில் இருந்து அரசு பேருந்தில் பயணம் செய்தார். கேளம்பாக்கம் வாட்டர் டேங்கில் அடையாளம் தெரியாத நபர் 4 மாத ஆண் குழந்தையுடன் பேருந்தில் ஏறினார். அப்போது பேருந்தில் கூட்டமாக இருந்ததால் குழந்தையை சரஸ்வதியிடம் கொடுத்தார். மரக்காணம் வந்தபோது குழந்தையை கொடுத்தவர் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் நடத்துனரிடம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஓட்டுநரும், நடத்துநரும் மரக்காணம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினர். இதையடுத்து, போலீஸ் உதவியுடன் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. மகளிர் போலீசார் அந்த குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இத்தகவல் அறிந்து கடந்த 7ம் தேதி குழந்தையின் பெற்றோர் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த கவியரசன், அவரது மனைவி விமலா என்பதும், கல்பாக்கத்தில் பேருந்து சிறிது நேரம் நின்றபோது கவியரசன் இயற்கை உபாதை கழிக்க சென்றதாகவும், அந்த சமயத்தில் பேருந்து கிளம்பி சென்றுவிட்டதாகவும், இதனால் குழந்தையை தவறவிட்டதாகவும் தெரிவித்தனர். அதன் பிறகு, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்தால் காப்பகத்தில் உள்ள குழந்தையை மீட்டு தருவதாக போலீசார் தெரிவித்தனர். உடனே அவர்கள் சென்னை சென்று குழந்தையின் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டுவந்து போலீசாரிடம் நேற்று சமர்ப்பித்தனர். இதையடுத்து, சமூக நலத்துறை அலுவலர் மூலம் காப்பகத்தில் இருந்த குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.