புலம் பெயர்ந்த செங்கல் சூளை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடப்புத்தகம், சீருடைகள்

திருவள்ளூர்: புலம் பெயர்ந்த செங்கல்சூளை தொழிலாளர்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளையும், கொத்தடிமை தொழிலாளர்கள் சுயதொழில் செய்து வாழ்வாதாரம் பெறும் வகையில் 11 பேருக்கு ரூ.60500 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் விழிப்புணர்வு தினம் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் அனைத்துறை அதிகாரிகளும் கொத்தடிமை தொழிலாளர் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றனர். இதனைத்தொடர்ந்து கொத்தடிமைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட நபர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் சுயதொழில் முறையை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூ.5,500 வீதம் 11 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும் வழங்கினார். இதேபோல், புலம்பெயர்ந்து செங்கல் சூளைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாக அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, அக்குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டது. மேலும், கொத்தடிமை தொழிலாளர் முறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பின் மூலம் தயார் செய்யப்பட்ட கைத்தறி துணிகள், கைவினை பொருள்களின் விற்பனையையும் அவர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கொத்தடிமைத் தொழிலாளர் முறையிலிருந்து விடுவித்தோர் தயார் செய்த கைத்தறி துணிகள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான தொகையை வழங்கி கொள்முதல் செய்தனர். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.ஆறுமுகம், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) ச.சுதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் அ.அமீதுல்லா (நிலம்), சி.வித்யா (பொது), ச.முரளி (தேர்தல்), தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) கார்த்திகேயன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, ஒருங்கிணைந்த கிராம சமுதாய வளர்ச்சி நிறுவன இயக்குநர் ஸ்டீபன், கொத்தடிமை மீட்புக்குழு உறுப்பினர் இரா.பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.