போனில் விளாசிய ஸ்டாலின்: அமைச்சர் எடுத்த நடவடிக்கை!

நெல் கொள்முதல்
நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்
சக்கரபாணி
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாளிதழில் காவிரி நெல்லுக்குக் கொள்முதல் தேவை; வல்முதல் எதற்கு? என்ற தலைப்பில் திரு. தங்க. ஜெயராமன் அவர்கள் எழுதிய கட்டுரையில் நெல் கொள்முதலில் சிப்பத்துக்கு முப்பது ரூபாய் கொடுத்துக் காவிரி நெல்லைச் செல்லுபடியாக்க வேண்டும். முப்பது என்பது இடம், காலம் பொறுத்துக் கூடுமே தவிர குறையாது என்று எழுதியிருந்ததை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
படித்து என்னை அலைபேசியில் உடனே அழைத்து இதுபோன்று தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, கட்டுரை ஆசிரியரிடமும் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

தவறு எங்கு நடந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல் கொள்முதலில் எவ்விதத் தவறும் நடைபெறக் கூடாது என்பதற்காக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். நெல் கொள்முதல் நிலைய சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு கொடுக்கப்பட்டு வந்த ரூ.3.25 என்ற ஊதியத்தை ரூ.10 ஆக உயர்த்தியதோடு பருவகால பட்டியல் எழுத்தர்களுக்குத் தினப்படியாக ரூ.120 மற்றும் பருவகால உதவுபவர்களுக்கும் காவலர்களுக்கும் தினப்படியாக ரூ.100 கூடுதலாக வழங்க ஆணையிட்டார்கள்.

கடந்த ஆட்சிக் காலத்திலிருந்ததைப் போன்று நெல் விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு நாற்பது ரூபாய் பெற்றதை நிறுத்துவதோடு நம் ஆட்சியில் விவசாயிகளிடமிருந்து ஒரு பைசா கூட பெறக்கூடாது என்ற நோக்கத்திற்காகத்தான் ஆண்டொன்றுக்கு அரசுக்கு 83 கோடி ரூபாய் கூடுதல் செலவானாலும் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது என்று கூறி என்னை அழைத்து ஊதியத்தைக் கணிசமாக உயர்த்திக் கொடுத்துள்ளதால் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி இனி நெல் கொள்முதல் நிலையங்களில் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நகைக்கடன் தள்ளுபடி அரசாணை ரத்து? நீதிமன்றம் மறுப்பு!

அவ்வாறே செய்ததோடு ஆய்வுக் கூட்டங்கள் வாயிலாகவும் அனைவருக்கும் இது தெரியப்படுத்தப்பட்டது. நெல் கொள்முதல் தொடர்பாக புகார் ஏதுமிருந்தால் கட்டணமில்லாத் தொலைபேசி (18005993540) எண்ணிற்குத் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனாலும், மூட்டைக்கு முப்பது ரூபாய் பெறப்படுகிறது என்கிற புகார் வருகிறது என்றால் எனக்கு வேதனையாக இருக்கிறது. இனி யாரேனும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தயங்காது என்பதை இதன் வாயிலாக எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனரையும் அழைத்து தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதோடு, இதை வலியுறுத்தி அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பக் கூறியுள்ளேன். விவசாயிகள் தங்கள் நெல்லிற்கு மூட்டை ஒன்றிற்கு ஒரு பைசா கூட கொடுக்கத் தேவையில்லை என்பதையும் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பத்தாண்டு காலமாக கடந்த ஆட்சியில் மாநில அரசு நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கவில்லை.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் வைத்த கோரிக்கை: செவி சாய்ப்பாரா முதல்வர்?

ஆனால், விவசாயிகளின் உண்மையான நண்பர் நம் தளபதி சன்னரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை 30 ரூபாய் உயர்த்தி ரூ.100 ஆகவும், பொது ரகத்திற்கு 25 ரூபாய் உயர்த்தி ரூ.75 ஆகவும் 01.10.2021 முதல் விவசாயிகளுக்கு வழங்க ஆணையிட்டார்கள். கடந்த ஆட்சியில் 07.01.2020 அன்று நெல் கொள்முதல் நிலைய சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கான ஊதியம் மூட்டை ஒன்றுக்கு 55 பைசா மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 31.12.2021 அன்று மாண்புமிகு தளபதி அவர்களால் நெல் கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான ஊதியம் மூட்டை ஒன்றுக்கு ரூ.6.75 உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உற்ற தோழராய் விளங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அனைவரும் செயலாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.