திசையன்விளை: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 7ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்வேறு மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக வருகின்றனர். திருவனந்தபுரம் ஆரிய சாலாதேவி கோவிலில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து பத்மநாப சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு 180 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து திருச்செந்தூர் வந்தடைகின்றனர்.அவ்வாறு காவடி எடுத்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரம் சந்திப்பில் உள்ள (கெபி) சிறு மாதா தேவாலயத்தில் காவடியை இறக்கி வைத்து மாதாவை வணங்கி ஆலயத்தில் உறங்கி இளைப்பாறுகின்றனர். பின்னர் அதிகாலை 4 மணிக்கு எழுந்து மீண்டும் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். முருக பக்தர்கள் மன்னார்புரம் தேவாலயத்தில் உறங்கி இளைப்பாறிச் செல்வது மத ஒற்றுமைக்கு மட்டுமல்லாது தேசிய ஒற்றுமைக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது.
