லக்கிம்பூர்: விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்த மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் 4 பேர் மீது கார் ஏற்றி படுகொலை செய்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
மத்திய பாஜக அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஓராண்டுகாலம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் உத்தரகாண்ட், உ.பி. மாநிலங்களிலும் எதிரொலித்தது.

உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு கறுப்பு காட்டியும் விவசாயிகள் அமைதிப் பேரணி நடத்தினர். அப்போது விவசாயிகள் கூட்டத்தில் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் துடித்து உயிரிழந்தனர். இச்சம்பவம் விவசாயிகளை கொந்தளிக்க வைத்தது. இதையடுத்து நிகழ்ந்த வன்முறைகளில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர்தான் இந்த சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் தொடர்பும் அம்பலமானது. ஆஷிஸ் மிஸ்ராதான் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்ததுடன் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது உறுதியானது. இவ்வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து கடுமை காட்டியதால் வேறுவழியே இல்லாமல் ஆஷிஸ் மிஸ்ராவை உ.பி. போலீசார் கைது செய்தனர்.
லக்கிம்பூர் கேரி: அமைச்சர் அஜய் மிஸ்ரா எதிராக அதிகரிக்கும் அழுத்தம்.. பாஜக தலைமையின் முக்கிய முடிவு
இவ்விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. ஆனால் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. தற்போது உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று 58 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.