அரியலூர் மாவட்டத்தில் வேளாண் துறையின் வளர்ச்சி திட்டப்பணிகள்-கலெக்டர் ஆய்வு

அரியலூர் : அரியலூர், திருமானூர் வட்டாரங்களில் வேளாண்மைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.விவசாயிகளின் முன்னேற்றத்தை மேம்படுத்தி அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வேளாண்மைத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு வேளாண் திட்டங்கள், மானிய விலையில் இடுப்பொருட்கள் வழங்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர், திருமானூர் வட்டாரங்களில் வேளாண்மைத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்யப்பட்டது.இந்த ஆய்வில், வாலாஜாநகரத்தில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தினை பார்வையிட்டு, பரிசோதனைகள் முறைகள் குறித்தும், பரிசோதனை முடிவின் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார். மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மண்வள அட்டையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கீழக்கொளத்தூர் விவசாயி கோவிந்தராசுவின் வயலில் மேற்கொள்ளப்பட்டுள்ள நெல் உருளை நேரடி விதைப்பு இயந்திரம் மூலமாக நடவு செய்யப்பட்டுள்ள வயலினை பார்வையிட்டு, நெல் உருளை நடவு மூலமாக நடவு செய்வதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, விவசாயி அழகர் வயலில் நிலக்கடலை விதைப்பண்ணையினை பார்வையிட்டு, விதை நிலக்கடலை பயிரிடும் முறைகள் குறித்தும், தற்போது விளைச்சல் குறித்தும் கேட்டறிந்தார். நிலக்கடலையின் ஊடுபயிராக உளுந்து பயிர் செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டார். மேலும், வெற்றியூர் விவசாயி திருஞானம் வயலில் ஆமணக்கு விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பழைய விதை பயிருக்கும் தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய ரகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்தும், விளைச்சல் குறித்தும் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார்.அதனைத்தொடர்ந்து, தூத்தூர் நேரடி கொள்முதல் நிலையத்தினை பார்வையிட்டு, விவசாயிகள் கொண்டுவந்துள்ள நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, சணல் சாக்கு கையிருப்பு, சணல் நூல் இருப்பு, இதுவரை பதிவு செய்துள்ள விவசாயிகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, நேரில் பார்வையிட்டு, மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார். ஆய்வின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சண்முகம், வேளாண்மை உதவி இயக்குநர்கள் சாந்தி (அரியலூர்), .லதா (திருமானூர்) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.