இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை; பண்ணாரி சோதனைசாவடியில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்ற சரக்கு லாரிகள்

சத்தியமங்கலம்: இரவுநேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் பண்ணாரி சோதனை சாவடியில் நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் அணிவகுத்து நின்றன. திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக செல்லும் சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்து நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இரவு முழுவதும் பண்ணாரி சோதனை சாவடியில் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. ஒரே நேரத்தில் மலைப்பாதையில் செல்ல வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  மேலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இரவு நேர போக்குவரத்து தடை அமலுக்கு வந்துள்ளதால் இன்று முதல் திம்பம் மலைப்பாதை வழியாக பயணிக்கும் வாகனங்களுக்கு வனத்துறையினர் நுழைவு கட்டணம் வசூலித்து வருகின்றனர். ஒவ்வொரு வாகனத்திற்கும் நுழைவு கட்டணம் வசூலிக்க 30 விநாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை நேரம் ஆவதால் நீண்ட வரிசையில் நின்ற வாகனங்களை அனுமதிக்க காலதாமதம் ஏற்படுகிறது.  இந்நிலையில் பண்ணாரி சோதனை சாவடியில் லாரி ஓட்டுநர்கள் இரவு முழுவதும் காத்திருந்து காலையில் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி செல்ல முடியாமல் தவிப்பதாகவும், அடர்ந்த வனப்பகுதியில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டுனர்களுக்கு உணவு கிடைக்காமல் சிரமப்பட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பழைய நடைமுறையில் இருந்தபடி 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து செல்லும் வகையில் தமிழக அரசு இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.