என்னுடைய யோசனைக்கு வேறு ஒருவர் பெருமை பெற்றார்: ரஹானே

2020-21 பார்டர் கவாஸ்கர் டிராபியில் இருந்து விராட் கோலி வெளியேறிய பிறகு அஜிங்க்யா ரஹானே இந்திய அணியை வழிநடத்தினார், மெல்போர்னில் ரஹானேவின் சதம் அடிலெய்டு போட்டியில் ஏற்பட்ட அவமானத்திற்கு பிறகு இந்திய அணியை வெற்றிக்கு ஊக்கப்படுத்தியது. சமீப காலங்களில் பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக அனைவராலும் கடுமையாக பேசப்பட்டார் ரஹானே.  பொதுவாக ரஹானே விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கமாட்டார்.  இருப்பினும், தற்போது ரஹானே சில சர்ச்சை கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.  

மேலும் படிக்க | மோசமான ஆட்டம்: புஜாரா, ரஹானேவை ரஞ்சி போட்டிகளுக்கு அனுப்ப திட்டம்!

ரஹானே கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த போராடி வருகிறார்.  பலர் தற்போதே ரஹானே தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவில் உள்ளார் என்று கூறிவருகின்றனர்.  ரஹானே ஏற்கனவே தனது கடைசி டெஸ்டில் இந்தியாவுக்காக விளையாடிவிட்டார் என்று பலர் நினைக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் ரஹானே தன் மனதில் இருந்த விஷயங்களை வெளிப்படுத்தி உள்ளார்.  விராட் கோலி இல்லாத நேரத்தில் இந்திய அணியை ரஹானே வழிநடத்தி இருந்தார்.  அந்த சமயத்தில் தான் சில முக்கிய முடிவுகளை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.  ஆனால் வேறு யாரோ அதற்க்கு பெருமை எடுத்து கொண்டதாக கூறியுள்ளார்.

“என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று மக்கள் கூறும்போது எனக்கு சிரிப்பு வருகிறது.  உண்மையில் விளையாட்டை அறிந்தவர்கள் அப்படிப் பேச மாட்டார்கள், ஆஸ்திரேலியாவில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும், அதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய பங்களிப்பை பார்த்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.  ஆஸ்திரேலிய தொடரில் நான் என்ன செய்தேன் என்பது எனக்குத் தெரியும், அதற்கு முழு கிரெடிட் எடுப்பது எனது இயல்பு அல்ல. போட்டியின் நடுவில் நான் எடுத்த சில முக்கிய முடிவுகள் இருந்தன, ஆனால் வேறு யாரோ அதற்க்கு கிரெடிட் எடுத்தார்கள். தொடரை வெல்வது தான் எனக்கு முக்கியம்” என்று கூறினார்.

அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் முதல் டெஸ்டில் இந்தியா மிகப்பெரிய தோல்வி அடைந்தது.  பிறகு, மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில் சதம் அடித்து அணியை வெல்ல ரஹானே முக்கிய பங்கு வகித்தார். இந்தியா தொடர்ந்து போராடி, சிட்னி டெஸ்டில் டிரா செய்தது.  கபாவில் நடந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்றது.  இந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டி மட்டும் கோஹ்லியின் தலைமையில் நடந்தது, மற்ற மூன்று போட்டிகளிலும் ரஹானே பொறுப்பேற்றார். 

அப்போது அணியின் வரலாற்று வெற்றிக்காக ரஹானே பலரின் பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், அணியில் அவரது இடம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.  தென்னாப்பிரிக்காவில் மோசமான தோல்விக்கு பிறகு, ரஹானே மீண்டும் மும்பைக்காக ரஞ்சி கோப்பை விளையாட உள்ளார். இலங்கை தொடருக்கான தேர்வுக்கு அவர் பரிசீலிக்கப்பட மாட்டார் என்று கருத்துகள் இருந்தாலும், ரஞ்சியில் சிறப்பாக விளையாடினால் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | புஜாராவை எச்சரித்த இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.