ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 9 படகுகள் திடீர் மாயம்- இலங்கை அதிகாரிகள் அதிர்ச்சி

ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 9 படகுகள் திடீர் மாயம்- இலங்கை அதிகாரிகள் அதிர்ச்சி

மன்னார்: ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 9 படகுகள் திடீரென மாயமானதால் இலங்கை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக இலங்கையில் இருந்து வெளியாகும் காலைக்கதிர் ஏடு வெளியிட்டுள்ள செய்தி: 2014ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு காலத்தில் தமிழக மீனவர்களின் 9 படகுகள் மன்னாரிலும், 6 படகுகள் தலைமன்னர் கடற்படைத்தளத்திலும் தரித்து நிறுத்தப்பட்டிருக்கின்றன என அறிக்கையிடப்பட்டது.

Nine Tamilnadu Fishermen Boats missing in Srilanka

இவ்வாறு நிற்கும் படகுகளில் மன்னார் மாவட்டத்தில் 9 படகு ஏலம் விடப்படும் எனவும் பத்திரிகையில் பகிரங்க விளம்பரம் பிரசுரிக்கப்பட்டது. இதற்கமைய நேற்றைய தினம் படகுகளை ஏலம் விடுவதற்காக நீரியல்வளத் திணைக்களம் மற்றும் அமைச்சுகளின் அதிகாரிகள் குழு மன்னார் முழுவதும் தேடியபோதும் அங்கே ஒரு படகு கூட அப்படிக் காணப்படவில்லை.

இதன் போது செய்தியாளர்களும் பிரசன்னமாகியிருந்தமையால் அதிகாரிகள் வாயடைத்து நின்றனர். இதனால் கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகள், திணைக்கள உத்தியோகத்தர் இடையே கடும் வாக்குவாதம் இடம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

தலைமன்னார், பியர் இறங்குதுறையில் நேற்று மதியம் இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலை யில், ஏல விற்பனையில் கலந்து கொண்டு படகுகளைக் கொள்வனவு செய்ய மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 30 இற்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் தலை மன்னார் -பியர் இறங்குதுறைப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

எனினும், அறிவிக்கப்பட்டது போன்று ஏல விற்பனை இடம்பெறவில்லை என வருகை தந்த கொள்வனவாளர்கள் தெரிவித்தனர். நேற்று காலை முதல் மதியம் வரை ஏல விற்பனைக்காகக் காத்திருந்தபோதும் இறுதி நேரத்திலேயே குறித்த ஏலவிற்பனை இடம்பெறாது என ஏற் பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், தூர இடங்களில் இருந்து வருகை தந்த கொள்வனவாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இவ்வாறு காலைக்கதிர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Nine Tamilnadu Fishermen Boats missing in Srilanka which was planned to auction.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.