சேலம்: சேலம் அருகே மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ16 லட்சம் கடன்தொகையை வங்கி அதிகாரி ஏமாற்றியதால், குழு ஒருங்கிணைப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகேயுள்ள ஆரியூரை சேர்ந்தவர் முருகேசன் மனைவி விஜயா (45), மகளிர் சுயஉதவிக்குழுவில் வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார். இவர், 4 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தனியார் வங்கியின் மூலம் கடன் வசதியை ஏற்பாடு செய்துள்ளார். இதன்படி, அந்த 4 குழுவிற்கும் ரூ16 லட்சம் கடனை, வங்கி அதிகாரி பழனிகுமார் வழங்கியுள்ளார். அப்போது, இன்னும் 4 நாட்களுக்கு ரூ16 லட்சம் பணமும் டெபாசிட்டில் இருக்க வேண்டும். பிறகு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் எனக்கூறி, ரூ16 லட்சம் பணத்தை பழனிகுமார் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. 4 நாட்கள் கழிந்த நிலையில், குழு ஒருங்கிணைப்பாளர் விஜயா, வங்கிக்கு சென்று அதிகாரி பழனிகுமாரிடம் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு, நீங்கள் யார் என்றே எனக்குத் தெரியாது, நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை எனக்கூறி திருப்பி அனுப்பியுள்ளார். இதனால், வீட்டிற்கு வந்த விஜயா, இப்படி ஏமாற்றி விட்டாரே, சுயஉதவிக்குழுவினருக்கு என்ன பதில் சொல்ல என புலம்பிக்கொண்டிருந்துள்ளார். 7ம் தேதி இரவு திடீரென வீட்டில் இருந்த எலி பேஸ்ட் விஷத்தை விஜயா சாப்பிட்டுள்ளார். மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், நேற்று அதிகாலை விஜயா பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தற்கொலை செய்த விஜயாவின் மகன் நந்தகுமார், ஏத்தாப்பூர் போலீசில் புகார் கொடுத்தார்.இன்ஸ்பெக்டர் குமரவேல் விசாரணை நடத்தி, மகளிர் சுயஉதவிக்குழு கடன் தொகை ரூ16 லட்சம் பணத்தை ஏமாற்றி, குழு ஒருங்கிணைப்பாளர் விஜயாவின் தற்கொலைக்கு காரணமாக இருந்த வங்கி அதிகாரி பழனிகுமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து வங்கி அதிகாரி பழனிகுமாரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
