பெண்ணை கொன்று சூட்கேசில் வைத்து வீசிய விவகாரம்: கிருஷ்ணகிரியில் பதுங்கிய வாலிபர் கைது: கணவரை தேடுகிறது போலீஸ்

திருப்பூர்: திருப்பூரில் பெண்ணை கொலை செய்து சூட்கேசில் வைத்து வீசிய விவகாரத்தில் கிருஷ்ணகிரியில் பதுங்கியிருந்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அப்பெண்ணின் கணவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலை எம்.புதுப்பாளையம் அருகே ரோட்டோரம் உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் கடந்த 7ம் தேதி ரத்தம் படிந்த நிலையில் சூட்கேஸ் ஒன்று கிடந்ததுஇது குறித்து அக்கம்பக்கத்தினர் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று பார்வையிட்ட போது, சூட்கேசுக்குள் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.  அவரை மர்மநபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து சூட்கேசில் திணித்து கழிவுநீர் கால்வாய்க்குள் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளம்பெண் யார்? அவரை கொலை செய்த நபர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படையும் அமைக்கப்பட்டது. சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்த போது  இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் 2 பேர் சூட்கேசை கால்வாய்க்குள் வீசி சென்றது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் திருப்பூர் வெள்ளியங்காடு கே.எம்.ஜி.நகரை சேர்ந்த  அபிஜித், அவரது நண்பர் சவுரா என்பது தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட பெண், அபிஜித்தின் மனைவி நேகா (26) என்றும் தெரியவந்தது. அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நேகா, கணவருடன் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த 5ம் தேதி இரவு நேகாவுக்கும், அவரது கணவர் அபிஜித்க்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அபிஜித், நேகாவை கடுமையாக தாக்கியதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். பின்னர் நேகாவை கழுத்தை நெரித்து கொலை செய்த அபிஜித், கொலையை மறைக்க வீட்டை காலி செய்வது போல் நாடகமாடி நேகாவின் உடலை சூட்கேசில் திணித்து எம். புதுப்பாளையம் பகுதியில் சாலையோர கழிவுநீர் கால்வாயில் வீசியுள்ளார். அபிஜித்துக்கு அவரது நண்பர் சவுரா உதவி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில்கிருஷ்ணகிரியில் பதுங்கியிருந்த சவுராவை  தனிப்படை போலீசார் கைது செய்து நேற்று மாலை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நேகாவின் கணவன் அபிஜித் அசாமில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மற்றொரு தனிப்படையினர் அசாமில் முகாமிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.