கேரளாவில் மலை இடுக்கில் சிக்கிய வாலிபர் மீது வழக்கு கிடையாது: தாயின் வேண்டுகோளை ஏற்றது கேரளா

திருவனந்தபுரம்:  கேரள மாநிலம்,  பாலக்காடு அருகே மலம்புழா செராடு பகுதியை சேர்ந்தவர் பாபு (23). தனது  நண்பர்கள் 4 பேருடன்  கும்பாச்சி என்ற மலைக்கு கடந்த 7ம் தேதி சாகசப் பயணம்  சென்றார். அப்போது  பாபு எதிர்பாராமல் கால் வழுக்கி விழுந்த போது பாறை இடுக்கில் சிக்கிக்  கொண்டார். காலில் காயம் ஏற்பட்டதால் அவரால் கீழே இறங்கி வர முடியவில்லை. ராணுவம், விமானப் படை வீரர்கள் மிகவும் நேற்று முன்தினம் அவரை மீட்டனர். தற்போது அவர் பாலக்காடு அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.மலையில் சாகசப் பயணம் செய்ய,வனத்துறையிடம் பாபு முறையான அனுமதி பெறவில்லை.இதனால், பாபு   உள்பட 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வனத்துறையினர் முடிவு செய்தனர், இதில் அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும். இந்நிலையில், பாபுவின்தாயார் ரஷீதா கூறுகையில், ‘‘ எனது குடும்பம் வறுமையில் உள்ளது. என் மகன் மீது வழக்குப்பதிவு செய்தால் என்னால் அதை தாங்கி கொள்ள முடியாது. எனவே, இதில் கேரள முதல்வர் தலையிட வேண்டும்,’ என வேண்டினார். இது தொடர்பாக, கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் நேற்று அளித்த பேட்டியில், ‘முதல்வரின் உத்தரவு பேரில், பாபு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பாபுவின் குடும்பத்திற்கு வனத்துறையினர் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டார்கள்,’ என்றார்.ராணுவத்தில் சேர விருப்பம்                    மலை  இடுக்கில் சிக்கிய பாபுவை லெப்டினன்ட் கர்னல்கள் ஹேமந்த் ராஜ், சேகர்  அத்ரி ஆகியோர் தலைமையிலான ராணுவ வீரர்கள் மீட்டனர். இது பற்றி கர்னல் ஹேமந்த் ராஜ் கூறுகையில், ‘‘மிகவும்  சாகசமாகத் தான் பாபுவை  நாங்கள் மீட்டோம். அவர் சிக்கி இருந்த பாறை இடுக்கில் செல்வது மிகவும்  கடினமாகும். எவ்வளவு சிரமமான பணியாக இருந்தாலும் அதை முடித்த பிறகு, ‘இந்திய ராணுவம் ஜெய்’ என்று முழங்கும் போது எங்களுக்கு கூடுதலாக சக்தி  கிடைக்கும். பாபுவை மீட்ட பிறகு, என்னையும்  ராணுவத்தில் சேர்ப்பீர்களா? என்று எங்களிடம் கேட்டார்,’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.