சிவசங்கர் பாபாவுக்கு உலகத் தரத்தில் சிகிச்சை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

சென்னை: சிவசங்கர் பாபாவுக்கு விஐபிகளுக்கு வழங்கப்படும் உலகத் தரத்திலான சிகிச்சை ஸ்டான்லி மருத்துவமனையில் அளிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் சகோதரி ஜெயலட்சுமி கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நீரிழிவு, பக்கவாதம், இதய நோய் உள்ளிட்டவற்றால் அவதிப்படும் தனது சகோதரருக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை. எனவே, அவரது தற்போதைய உடல்நிலை குறித்து தனக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிச்சை பெற அனுமதிக்க கோரி சிபிசிஐடி போலீசார் மற்றும் புழல் சிறை நிர்வாகத்திடம் கடந்த ஜனவரி 23-ம் தேதி மனு அளித்தேன். இதனை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. எனவே தனது கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ‘சிவசங்கர் பாபாவுக்கு தனியார் மருத்துவமனையை விட அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூத்த மருத்துவர்கள் தான் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் விஐபிகளுக்கு வழங்கப்படும் உலகத் தரத்திலான சிகிச்சை சிவசங்கர் பாபாவுக்கு அளிக்கப்படுகிறது. ஸ்டான்லி மருத்துவமனையை விட தனியார் மருத்துவமனையால் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியாது.

ஸ்டான்லி மருத்துவமனை சிகிச்சையில் திருப்தி இல்லை என்றால், ஓமந்தூரார் உயர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம்’ எனக் கூறப்பட்டது.

‘சிவசங்கர் பாபாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்திருக்கும் நிலையில், அமெரிக்காவின் ப்ரூக்ளீன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க விரும்புகிறீர்களா?’ என மனுதாரர் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினர். பின்னர், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.