அரசு பஸ்சை மடக்கி வட்டமடித்த யானை; பயணிகள் திக்…திக்…திக்…

திருவண்ணாமலை: ஆந்திராவிலிருந்து 12 யானைகள் கொண்ட கூட்டம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர், உணவு கிடைக்காமல் ஜவ்வாதுமலையில் உள்ள ஏராளமான குடிசை வீடுகள் மற்றும் பயிர்களை சேதமாக்கியது. அதன் பிறகு அந்த யானை கூட்டத்தில் சில யானைகள் மின்சாரம் தாக்கியதில் பலியானது. தொடர்ந்து சுமார் 6 யானைகளை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். இந்த கூட்டத்தில் இருந்த ஆண் யானை ஒன்று வழி தவறி சென்றது. இதனால் அந்த யானையை பிடிக்க முடியவில்லை. வயதான காரணத்தால் கண் பார்வை கொஞ்சம் மங்கலாக உள்ளதால் பெரும்பாலும் இந்த யானை காட்டுக்குள் செல்லாமல் நடுரோட்டில் நடந்து சென்று சாலையோரம் உள்ள காட்டில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. ஒற்றை தந்தம் கொண்டுள்ள இந்த யானையால் ஜவ்வாதுமலையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலையடிவாரத்தில் நேற்று இந்த யானை மீண்டும் வந்தது. நேற்று மாலை ஜமுனாமரத்தூரிலிருந்து ஆலங்காயம் நோக்கி அரசு பஸ் குறைந்த பயணிகளுடன் மலையடிவார பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவில் ஒற்றை யானை வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டார். அருகே வந்த யானை தும்பிக்கையை ஜன்னல் வழியே நுழைத்து பிளிறியது. இதனால் பயணிகள் முதலில் நடுங்கினர். அதன் பிறகு பஸ்சை ஒரு சுற்று சுற்றி வந்தது. ஆனால் எந்த தொந்தரவும் செய்யவில்லை. இதனால் நிம்மதி அடைந்த பயணிகள் அந்த யானையை பல விதங்களில் செல்போனில் படம் எடுத்தனர். 15 நிமிடத்திற்கு பிறகு அந்த யானை அமைதியாக சாலையோரத்தில் உள்ள காட்டிற்குள் சென்று மறைந்தது. அதன் பிறகு அரசு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.