இரவு நேர போக்குவரத்து தடையால் தமிழக-கர்நாடக எல்லையில் அணி வகுத்து நின்ற வாகனங்கள்: பொதுமக்கள் கடும் அவதி

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடையால் தமிழக-கர்நாடக மாநில எல்லையில் நீண்ட வரிசையில் அணிவகுத்து  வாகனங்கள் நின்றன. இதனால், பொதுமக்கள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்களால் வனவிலங்குகள் அடிபட்டு உயிரிழப்பதால் இது சம்பந்தமான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட கலெக்டரின் உத்தரவை அமல்படுத்தமாறு அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து, திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை நேற்று முன்தினம் மாலை முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால், பண்ணாரி சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவே வனத்துறையினர் வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக, தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள பண்ணாரி சோதனைச்சாவடியிலும், கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்கள் கர்நாடக மாநில சோதனைச்சாவடியான புளிஞ்சூர் சோதனை சாவடியிலும் பல கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. நேற்று காலை 6 மணி முதல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் காலை 6 மணிக்கு தொடங்கிய போக்குவரத்து பாதிப்பு மாலை வரை நீடித்தது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். அடர்ந்த வனப்பகுதியில் பல மணி நேரமாக காத்துக்கிடக்கும் வாகன ஓட்டுனர்கள் உண்ண உணவு மற்றும் குடிக்க தண்ணீர் இன்றி தவிப்பதாக வேதனை தெரிவித்தனர்.நுழைவு கட்டணம் வசூல்:  கடந்த 2019ஆண்டு ஈரோடு கலெக்டர் திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்தை தடை செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் வனத்துறையினர் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை முதல் வன சோதனைச்சாவடியில் வனத்துறை ஊழியர்கள் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலித்தனர். நுழைவு கட்டணம் செலுத்தும் வாகன ஓட்டிகளுக்கு ரசீது வழங்கப்பட்டது. பேருந்துகள் 5 மணி நேரம் தாமதம்: போக்குவரத்து நெரிசல் காரணமாக நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு 2 மணி நேரத்தில் செல்ல வேண்டிய பேருந்துகள்  5 மணி நேரம்  கழித்தை சென்றது. இதனால், பயணிகள் தவித்தனர். 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் இருந்து குறித்த நேரத்திற்கு பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவ மாணவியர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.