உடல் நலம் தேறிய புலிக்கு வேட்டை பயிற்சி அளிக்க திட்டம்

வால்பாறை : வால்பாறையில் உடல் நலம் தேறி வரும் புலிக்கு வேட்டை பயிற்சி அளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.கோவை மாவட்டம் வால்பாறை அடுத்து உள்ள முடீஸ் எஸ்டேட் பஜார் பகுதியில் 2 வயது ஆண் புலி, உடல் மெலிந்து நடமாடி வந்தது. இந்நிலையில், பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் புதர்களில் பதுங்கியிருந்த புலியை வனத்துறையினர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி வலைவிரித்து பிடித்தனர்.அதற்கு சிகிச்சை அளித்த போது, புலிக்குட்டி முள்ளம்பன்றி வேட்டையின் போது, பலத்த காயம் அடைந்து, முட்களை சாப்பிட்டதால் உள்காயமும் அடைந்து, சாப்பிடமுடியாமல் மெலிந்து, நடக்க முடியாமல் இருந்தது தெரியவந்தது. புலியின் உடலில் இருந்து முள்ளம் பன்றியின் முட்கள் எடுக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.ரொட்டிக்கடை முகாமில் இருந்து மாற்றப்பட்ட புலிக்குட்டிக்கு மானாம்பள்ளி பீட்டில் உள்ள அடர் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 4 மாதங்களுக்கு பிறகு புலியின் உடல் நிலை சீரடைந்ததை தொடர்ந்து உணவாக கோழி அளிக்கப்பட்டு வருகிறது.கோழியை வேட்டையாடி சாப்பிடும் அளவிற்கு புலிக்குட்டி உடல் நலம் தேறி உள்ளது. சிறப்பு குழு அமைத்து புலியின் உடல் நிலை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக தலைமை வன உயிரினக் காப்பாளர் சேகர் குமார் நீரஜ் தலைமையில், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் இராமசுப்பிரமணியம், துணை கள இயக்குநர் கணேசன் மற்றும் வன கால்நடை மருத்துவர் கலைவாணன் மற்றும் வனத்துறை குழுவினர் புலியின் உடல்நிலை குறித்து ஆய்வு கடந்த அக்டோபர் 18ம் தேதி ஆய்வு செய்தனர்.புலி பல நாட்கள் கூண்டுக்குள் அடைபட்டு உள்ள நிலையில், புலிக்கு இயற்கையான கூண்டு அமைத்து, அதற்கு வேட்டை திறனை மேம்படுத்த தேசிய புலிகள் ஆணையம் வழிகாட்டுதலின் படி கூண்டு அமைக்க அதிகாரிகள் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டனுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் கூண்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.விரைவில் பெரிய கூண்டிற்கு மாற்றப்பட்டு நடைபயிற்சி, வேட்டை பயிற்சி அளித்து, வனத்திற்குள் முழு வேட்டை விலங்காய் புலி விடப்படும் என வனத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.