எல்லா திட்டமும் பிரதமரின் ஜஸ்ட் 2 நண்பர்களுக்காகவே கொண்டுவரப்படுகிறது – பாஜகவை விளாசிய பிரியங்கா
உத்தரகாண்ட்: பிரதமரின் நண்பர்களான 2 தொழிலதிபர்களுக்காகவே நாடு முழுவதும் கொள்கைகள் நடந்து வருகின்றன என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் முதற்கட்டத் தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. அதேபோல, உத்தரகாண்டில் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கவும் காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்கிறது.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் காங்கிரஸ் கட்சியின் முகமாக வலம் வரும் பிரியங்கா காந்தி, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
பிரதமருக்கு இந்த தேசத்தின் மீது தார்மீக பொறுப்பு இல்லையா – பிரியங்கா ஆவேசம்

பிரியங்கா காந்தி
உத்தரகாண்ட் மாநிலம் கதிமாவில் இன்று காலை பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். அப்போது, ”பிரதமரின் நண்பர்களான 2 தொழிலதிபர்களுக்காகவே நாடு முழுவதும் கொள்கைகள் நடந்து வருகின்றன. பட்ஜெட் வரும்போது, ஏழைகள், விவசாயிகள், நடுத்தர வர்க்கம், சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு எதுவும் வழங்காது” என்று தெரிவித்துள்ளார்.

கடமை
மேலும் ”ஒரு அரசியல் தலைவரின் மிகப்பெரிய கடமை என்ன, மக்களுக்கு சேவை செய்வது, அவர்களின் வளர்ச்சி. இன்று அனைத்து பாஜக தலைவர்களும் – உங்கள் முதல்வர் முதல் நாட்டின் பிரதமர் வரை – தங்கள் சொந்த வளர்ச்சியைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். யாரும் உங்களைப் பற்றி நினைக்கவில்லை” என மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரியங்கா காந்தி.

உத்தரகாண்ட்
70 இடங்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்கு அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. உத்தரகாண்ட் தேர்தல் பிரசாரம் ஓய உள்ள நிலையில் இறுதி கட்ட பிரசாரங்கள் நடக்கிறது. அண்மையில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, நான் டெல்லியில் வசித்தாலும் என் மனதில் இருப்பது எல்லாம் உத்தரகாண்ட் மக்கள்தான் என்றார். காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கும் என்றார் ராகுல் காந்தி. உத்தரகாண்ட் மாநிலத்தை சர்வதேச ஆன்மீக தலமாக மாற்றுவோம் என்பது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதி.

காங்கிரஸ்
உத்தரகாண்டில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் பல காங்கிரஸ் தலைவர்கள் வேறு கட்சிக்கு சென்றுவிட்டதால், காங்கிரஸ் கட்சி கலக்கத்தில் இருக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் உத்தரகாண்டில் பிரசாரம் செய்யவுள்ளனர்.