காதலர் தின கொண்டாட்டம்; ஓசூரில் இருந்து 50 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி

ஓசூர்: காதலர் தின கொண்டாட்டத்திற்காக ஓசூர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட ரோஜா மலர்கள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் 50 லட்சம் மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சீரான சீதோஷ்ணம் நிலவுவதால், இங்கு ரோஜா மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட்ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட வகையான ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் ஆகிய கொண்டாட்டங்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, காதலர் தினத்திற்கு மட்டுமே ஆண்டுக்கு ஒரு கோடி மலர்கள் ஓசூரிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் அன்னிய முதலீடுகளும் பெறப்பட்டன. நடப்பாண்டு காதலர் தின கொண்டாட்டங்களுக்காக சுமார் 50 லட்சம் ரோஜா மலர்கள் கடல் கடந்து சென்றுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத இறுதியில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ரோஜா மலர்களை அனுப்பி வைக்க ஆர்டர்கள் பெறப்படும். நடப்பாண்டு 6ம் தேதி முதல் நேற்று வரை ஆர்டர்கள் பெறப்பட்டு லட்சக்கணக்கான மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் இன்றளவும் கொரோனா தாக்கம் ஒருபுறம் இருப்பதால், காதலர் தினம் போன்ற விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் என்ற நம்பிக்கையோடு மலர்களுக்கு ஆர்டர்கள் பெற்று விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். இந்தியாவிலுள்ள உள்ளூர் சந்தைகளிலும், ஓசூர் ரோஜா மலர்களுக்கு தற்போது நல்ல விலை கிடைத்து வருகிறது. இருந்தபோதிலும் காதலர் தின விழாவிற்காக வெளிநாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதியானால், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். கொய்மலர் சாகுபடியை நம்பி ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரம் விவசாயிகளும், 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களும் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ரோஜாமலர் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு நஷ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு தற்போது காதலர்தின கொண்டாட்டம் ஓரளவிற்கு ஆர்டரை கொடுத்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பூ ஒன்றுக்கு ₹20 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நல்ல விலை என்றாலும் உற்பத்தி குறைவாகவே உள்ளது. உலக நாடுகளில் காதலர் தினத்திற்காக ரெட் மற்றும் பிங்க் கலரில் நீளமுள்ள தண்டுகள் உள்ள ரோஜாக்களையே விரும்புகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக ரோஜா ஏற்றுமதி குறைந்த நிலையில், நடப்பாண்டு ஓரளவிற்கு ஆர்டர் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.