காரில் வேட்டி, சேலை பறிமுதல் எதிரொலி; ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா பள்ளியில் தேர்தல் பறக்கும் படை சோதனை

பெரியகுளம்: ஒபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா நடத்தும் பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்றிரவு அதிரடி சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் 3வது சகோதரரான சண்முகசுந்தரம் அதிமுக சார்பில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவர் 24வது வார்டு பகுதிகளான தெற்கு மற்றும் வடக்கு அக்கரஹார பகுதியில் மாலை நேரங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில், நேற்று வாக்கு சேகரிப்பின் போது வாக்காளர்களுக்கு வழங்க சேலை மற்றும் வேட்டிகளை காரில் கொண்டு வந்துள்ளார். இதையறிந்த திமுகவினர் சேலை மற்றும் வேட்டிகளை கொண்டு வந்த காரை பெரியகுளம் தென்கரை பெருமாள் கோவில் முன்பாக தடுத்து நிறுத்தினர். தடுத்து நிறுத்திய கார் தேனி ஆவின் தலைவர் ஓ. ராஜாவின் மகன் மருத்துவர் முத்துக்குகனுக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து திமுகவினர் அந்த காரை சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் நகராட்சி தேர்தல் நடத்து அலுவர் புனிதன் திமுகவினர் சிறை பிடித்த காரை சோதனை செய்ய முற்பட்டனர். இதையறிந்து அதிமுகவினர் அங்கு குவிந்தனர். அவர்கள், காரை பின்பக்கமாக இயக்கி அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டனர். தென்கரை போலீசார், அதிமுக பிரமுகர் காரை விரட்டி பிடித்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் பிடிபட்ட ஓ.ராஜா மகன் காரை சோதனை செய்தனர். காரில் 20 சேலைகள் மற்றும் வேட்டிகள் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர். இதனை தொடர்ந்து காரின் உரிமையாளரான மருத்துவர் முத்துக்குகன் தான் நடத்தும் பள்ளியில் நடைபெற இருக்கும் விழாவில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்குவதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து 50 வேட்டி சேலைகளை வாங்கியதாக கூறினார். 24வது வார்டில் வேட்டி, சேலைகளை வழங்கிவிட்டு மீதம் உள்ள வேட்டி, சேலைகளை காரில் வைத்திருந்ததாகவும், 24வது வார்டில் போட்டியிடும் சண்முகசுந்தரத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அதிமுக வேட்பாளர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் திமுகவினர் முறையிட்டனர். இந்நிலையில், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா நடத்தும், பெரியகுளம் அருகே தென்கரையில் உள்ள பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்றிரவு சோதனை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.