திருச்சி: மன்னர்வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் நேற்று 2வது நாளாக பலத்த மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. மழை காரணமாக இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கர் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. திருவாரூரில் கண்கொடுத்தவனிதம், எண்கண், காப்பனாமங்கலம் உள்ளிட்ட இடங்களில் பல இடங்களில் அறுவடைக்கு தயாரான 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்து விட்டது. வயல்களில் சேறாக இருப்பதால் இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டெல்டாவில் மொத்தமாக சுமார் 2.50 லட்சம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களில் மழை நீர் தேங்கி உள்ளது. அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தஞ்சை அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் தார்பாய் போட்டு நெல் நனையாமல் விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். இதே நிலைதான் பல இடங்களில் நீடித்தது. மழை பெய்து வருவதால் கொள்முதல் பணியும் பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை அருகே ஆனந்தக்குடியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன.கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. மயிலாடுதுறை, திருவாரூரில் பள்ளிகளில் திருப்புதல் தேர்வு நடக்கும் 10 மற்றும் 12ம் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கும், இதேபோல் தேர்வு நடக்கும் மாணவர்களை தவிர கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. மழை அளவு(மி.மீ): திருவாரூர் 61.2, நன்னிலம் 47, குடவாசல் 50.2, வலங்கைமான் 32.8, மன்னார்குடி 68, நீடாமங்கலம் 63, பாண்டவையாறு தலைப்பு 62, திருத்துறைப்பூண்டி 54, முத்துப்பேட்டை 9. வேதாரண்யம் 70, கோடியக்கரை 80.
