ராமநாதபுரம்: தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசை கண்டித்து வேலை நிறுத்தம் செய்து வரும் மீனவர்கள் வாக்காளர் அட்டை போன்றவற்றை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தர வேண்டும், ஏலம் விடப்பட்ட படகுகளை மீட்டுத்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் வேலைநித்தம் 3-வது நாளாக நீடிக்கிறது.இதற்காக மீன்வளத்துறை அலுவலகத்திலிருந்து ரயில் மறியல் போராட்டம் நடத்த ஏராளமான மீனவர்கள் ஊர்வலமாக சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மீனவர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24-ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து பேரணியாக சென்று ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
