வேற லெவல்.. மருமகளுக்காக மாமனார் இப்படியும் ஒரு உதவி செய்ய முடியுமா? நெகிழ்ந்துபோன மகாராஷ்டிரா
அவுரங்காபாத்: உயிருக்கு போராடிய பெண்ணுக்கு, மாமனார் தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்து காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.
தற்போதைய காலக்கட்டத்தில் உடல் உறுப்புகள் செயலிழக்கும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மதுபானம், புகைப்பழக்கத்தால் சிலருக்கு உடல் உறுப்புகள் செயலிழக்கின்றன. இதுதவிர நோய் தாக்குதல் உள்பட வேறு சில காரணங்களாலும் சிலரின் உடல் உறுப்புகள் சரியாக செயல்படாத நிலைக்கு செல்கின்றன.
இவ்வாறு பாதிக்கப்படும் நபர்களை காப்பாற்ற உடல் உறுப்பு தானம் அவசியமாகும். முன்காலத்தை ஒப்பிடும்போது தற்போது உடல் உறுப்பு தானம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக யாரேனும் மூளைச்சாவு அடைந்தால் அவர்களின் குடும்பத்தினர் தாமாகவே முன்வந்து உடல் உறுப்பு தானம் செய்கின்றனர். இது வரவேற்கத்தக்க விஷயம்
கர்நாடகாவிலுள்ள பள்ளியில் மாணவர்கள் நமாஸ் செய்ததாக புகார்.. வெளியான வீடியோ.. கல்வித்துறை விசாரணை

மாமனார் தானம்
இருப்பினும் சில நேரத்தில் நீண்ட நாள் நோய் பாதித்த நபருக்கு உடல் உறுப்பு தானமாக கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதும் வாடிக்கையானதாக மாறியுள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறுநீரகம் பாதித்த பெண்ணுக்கு மாற்று சிறுநீரகம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவரது மாமனார் ஒருவர் சிறுநீரக தானம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

வீக்கங்கள் ஏற்பட்டன
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயது பெண். இவர் கடந்த 5 மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். உடலில் ஆங்காங்கே வீக்கங்கள் ஏற்பட்டன. அருகே உள்ள மருத்துவமனை டாக்டரை அணுகினர். பரிசோதனை மேற்கொள்ளபட்டது. அப்போது அவரது சிறுநீரகம் செயலிழந்து இருப்பதாக டாக்டர் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

டயாலிசிஸ் செய்தனர்
இதற்கிடையே சிறுநீர் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறினர். இதற்கு குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். மேலும் மாற்று சிறுநீரகம் தேட துவங்கினர். யாரும் சிறுநீரக தானம் கொடுக்க முன்வரவில்லை. தொடர்ந்து தேடினர். பெண்ணுக்கு ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) செய்யப்பட்டு வந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

குடும்பம்
இதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றார். இதில் குணமானார். இருப்பினும் சிறுநீரகம் தானமாக வழங்க யாரும் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவர் சிறுநீரகம் கொடுக்க முன்வரலாம் என டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அந்த பெண்ணின் மாமனார் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்தார். பின்னர் பிப்.,2ல் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டது. மாமனாரின் சிறுநீரகத்தை தானமாக டாக்டர்கள் எடுத்து பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தினர்.

இருவரும் நலம்
தொடர்ந்து இருவரும் கண்காணிக்கப்பட்டனர். இருவருக்கும் எந்த உடல்நலக்குறைவும் ஏற்பவில்லை. மாறாக இருவரும் நலமாகினர். மருமகளின் உயிரை காப்பாற்ற மாமனாரே தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நிகழ்வு மக்களிடையே நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.