கல்வி, சுகாதார துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு…அதிகரிக்குமா? கூடுதல் வரி நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை| Dinamalar

நாட்டில் பல ஆண்டுகளாக நேரடி மற்றும் மறைமுக வரி செலுத்துவோரிடம் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது. இது எந்த நோக்கத்திற்காக பெறப்படுகிறதோ அதை முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை தான் உள்ளது.

கடந்த 2007 – 08ம் நிதியாண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்விக்காக, 1 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதன் மூலம் கல்விக்கான கூடுதல் வரி, 3 சதவீதமாக உயர்ந்தது. இந்த கூடுதல் வரி மூலம் வசூலான தொகையில், 94 ஆயிரம் கோடி ரூபாய் உரிய முறையில் செலவிடப்படவில்லை என்பதை, சி.ஏ.ஜி., எனப்படும் இந்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம், 2018 – 19ம் நிதியாண்டு தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டியது.
நிதி ஒதுக்கீட்டிற்கு என தனி நிதியம் ஏற்படுத்திய பிறகும் கூட போதுமான நிதி, குறிப்பிட்ட துறைக்கு ஒதுக்கப்படாமலிருப்பது, அரசு நடைமுறைக்கு மாறானது எனவும் அந்த அறிக்கை கூறியது.இந்நிலையில், நடப்பு 2021 – 22ம் நிதியாண்டு பட்ஜெட்டில், ‘உயர் கல்விக்கு 38 ஆயிரத்து 350 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்’ என தெரிவிக்கப் பட்டது. இது, வரும் 2022 – 23ம் நிதியாண்டில், 40 ஆயிரத்து 828 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

2.6 சதவீதம்

அதாவது, மத்திய அரசின் மொத்த செலவினத்தில் கல்வித் துறையின் பங்கு, 2.3 சதவீதம் என்ற அளவில் இருந்து, வரும் நிதியாண்டில், 2.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுஉள்ளது.ஆனால் இதில் பெரும்பாலான நிதி, கல்விக்கான கூடுதல் வரி மூலம் தான் கிடைக்க உள்ளது. நடப்பு நிதியாண்டில், பட்ஜெட் செலவினத்தில் கல்வித் துறையின் பங்கு, 2.3 சதவீதம் என்று இருக்கும் நிலையில், 91 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிஇருக்க வேண்டும்.
ஆனால், கடந்த ஐந்து ஆண்டு கால பட்ஜெட்டில், கூடுதல் வரி வசூலை தவிர்த்துப் பார்த்தால், கல்விக்கான ஒதுக்கீடு குறைந்து வருவது புரியும். இதனால், பட்ஜெட் ஒதுக்கீட்டில் கல்வித் துறையின் ஒட்டுமொத்த பற்றாக்குறை, 1.37 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.கடந்த 2011 – 12ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கான செலவினம், 3.2 சதவீதமாக இருந்தது. இது, 2018 – 19ல், 2.8 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் பிரேசில், தென் ஆப்ரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள், கல்விக்காக அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறையே, 6.3 சதவீதம், 5.9 சதவீதம், 5.4 சதவீதத்தை செலவிடுகின்றன.

சர்வதேச அளவில் கல்விச் செலவு சராசரியாக, 4.2 சதவீதம் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இதற்கிடையே, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் மற்றும் கிராமப்புற மக்களுக்காக, 2018ல் சுகாதாரத்திற்கான கூடுதல் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. நடப்பு பட்ஜெட்டில், மொத்த செலவினத்தில், சுகாதாரத் துறைக்கு 2 சதவீதம் ஒதுக்கினால் கூட, 88 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இருக்கும். ஆனால், கூடுதல் வரி வசூலோடு சேர்த்து, 83 ஆயிரம் கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், கூடுதல் வரி வருவாயை நீக்கினால், ஒதுக்கீடு 1.6 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கும். அதாவது, 62 ஆயிரத்து 451 கோடி ரூபாய் என்ற அளவிற்கே இருக்கும். இந்த வகையில் மொத்த செலவினத்தில், 25 ஆயிரத்து 700 கோடி ரூபாய் பற்றாக்குறை விழுந்துஉள்ளது.

latest tamil news

ரூ.74 ஆயிரம் கோடி

இந்த பற்றாக்குறை, கடந்த மூன்று ஆண்டுகளில், 74 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.கூடுதல் வரி வருவாய் மூலம் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான செலவினங்களை அதிகரிக்காமல், இந்த முக்கிய இரு துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்து வருகிறது. சமூகத்தின் மிக முக்கியமான கல்வி, சுகாதாரம் என்ற இரு துறைகளுக்கு பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கினால் தான், உலகிற்கு தலைமை ஏற்கவும், சர்வதேச தயாரிப்பு மையமாக உருவாகவும் விரும்பும் இந்தியாவின் கனவுக்கு அர்த்தம் இருக்கும்.

– நமது சிறப்பு நிருபர் –

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.