திமுக ஆட்சியில் திரும்பிய திசையெல்லாம் லஞ்ச நதி பெருக்கெடுத்து ஒடுகிறது – வெளியான பரபரப்பு அறிக்கை.!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் சிவ இளங்கோ இன்று விடுத்துள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவில் கரியமலை கிராமத்தில் சிட்டாவில் பெயர் சேர்க்க கிராம நிர்வாக அலுவலர் 4000 ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேட்டமலை கிராமத்தில் பட்டாசு கடை கட்டிட வரைபட அனுமதிக்கு ஊராட்சி செயலர் 20000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

திருவள்ளூர் மப்பேடு பகுதியில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மின் வணிக ஆய்வாளர் 3000 ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். பட்டா மாறுதலுக்கு கோவை வடக்கு தாசில்தார் பெற்ற லஞ்சம் 25000 ரூபாய்.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் பயனாளியாக கிராம பஞ்சாயத்து தலைவர் கேட்கும் லஞ்சம் 20000 ரூபாய்.

திம்பம் மலைப்பாதையில் செல்ல பண்ணாரி ஆர்.டி.ஓ சோதனைச்சாவடியில் ஒரு லாரிக்கு 100 ரூபாய் லஞ்சம் வாங்குவதை புதிய தலைமுறை அம்பலப்படுத்தியுள்ளது.

‘பப்ஜி’ மதனுக்கு சிறையில் சொகுசு வசதி செய்து கொடுக்க உதவி ஜெயிலர் அட்வான்ஸ் 25000 ரூபாயை கூகிள் பே மூலம் வாங்கியுள்ளார்.
 
நெல் கொள்முதல் நிலையங்களில் சிப்பத்துக்கு 30 ரூபாய் லஞ்சம்.

மேலே நீங்கள் காண்பது கடந்த வாரத்தில் தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் நடந்தவற்றின் சில சாம்பிள்கள்தான். ஊடகங்களில் அம்பலமான அனைத்துச் செய்திகளையும் பட்டியல் போட்டால் எழுத தாள்களும் பத்தாது. நாட்களும் பத்தாது.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள லஞ்ச ரேட்கார்டு பட்டியலை கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அதிரடியாக வெளியிட்டார். ஒராண்டு முடிந்து புதிய ஆட்சி பொறுப்பேற்றதும் இந்த லஞ்சப் பட்டியலில் கணிசமான கட்டண உயர்வு நிகழ்ந்திருப்பதை நாம் கண் கூடாகக் காண முடிகிறது.

திமுக ஆட்சியில் திரும்பிய திசையெல்லாம் லஞ்ச நதி பெருக்கெடுத்து ஒடுகிறது. இவற்றைக் களையெடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் வாரிசுகளை, குடும்ப உறுப்பினர்களை உள்ளாட்சிப் பதவிகளில் பொறுத்திப் பார்ப்பதில் பிஸியாக இருக்கிறார்கள்.

அரசின் எந்த சான்றிதழையும், எந்த நலத்திட்டத்தையும், எந்த உதவிகளையும் லஞ்சம் கொடுக்காமல் வாங்க முடியாது என்பதும் இதற்கான லஞ்சத் தொகை திமுக ஆட்சியில் பெருகி விட்டதும் மறைக்க முடியாத மறுக்க முடியாத உண்மைகளாகும்.

தமிழர்களுக்குத் தரப்போவதாக சொன்ன விடியல் இதுதானா?!” என்று மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் சிவ இளங்கோ கேள்வி எழுப்பியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.