FIR விமர்சனம்: கமர்ஷியல் ஆக்ஷன் த்ரில்லர்தான்… ஆனால், படம் பேசும் அரசியல் சரியா?!

இந்தியாவில் இருக்கக்கூடிய பொதுபுத்தியின் காரணமாக IITயில் கோல்டு மெடலிஸ்ட்டாக இருந்தாலும் இர்ஃபானுக்கு அவர் படிப்புக்கான வேலை இன்னும் கிடைக்க மறுக்கிறது. இன்னொரு பக்கம் ISIS தீவிரவாதிகளின் முக்கியத் தலைவரான அபு பக்கர் அப்துல்லா ஒரு தமிழர் என்பதும், அவர்களின் அடுத்த இலக்கு தமிழ்நாடு என்பது NIAவுக்குத் தெரிய வருகிறது. இர்ஃபானின் மதமும், அவர் பேசிய விதமும், காவல்துறைக்கு சந்தேகத்தைக் கிளப்ப அவரைத் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு சிறைப்பிடிக்கப்படுகிறார். அடுத்த என்ன நடக்கிறது, தமிழகம் தப்பித்ததா, உண்மையில் இர்ஃபான் யார், அவர் ஏன் இதற்குள் சிக்குகிறார் என்பதற்கான விடைகள்தான் மீதிக்கதை.

FIR விமர்சனம்

‘நீர்ப்பறவை’, ‘ஜீவா’, ‘ராட்சசன்’ வரிசையில் விஷ்ணு விஷாலுக்கு இர்ஃபானாக மீண்டுமொரு நல்லதொரு கதாபாத்திரம் வாய்த்திருக்கிறது. எமோஷனல் காட்சிகளிலும், ஒரு இஸ்லாமியராக இருப்பதே ஏன் இங்கு ஒரு பாதகச் செயலாகப் பார்க்கப்படுகிறது போன்ற காட்சிகளிலும் சிறப்பானதொரு நடிப்பை வழங்கியிருக்கிறார். வழக்கறிஞராக மஞ்சிமா மோகன், இர்ஃபானின் அம்மாவாக மாலா பார்வதி, NIA அதிகாரி அனிஷா குரோஷியாக ரைஸா வில்சன் மூவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். NIA இயக்குநர் அஜய் திவானாக கௌதம் வாசுதேவ் மேனன். மிடுக்கான காவல்துறை அதிகாரி வேடமெனில் அதில் இனி நிச்சயம் கௌதம் மேனனை லிஸ்ட்டில் வைத்துக்கொள்ளலாம் என்னும் அளவுக்கு பொருத்தமாக இருக்கிறார். குணசேகராக வரும் பிரவீன் குமாரின் கதாபாத்திரம் செயற்கையாக ஹைப்பர் மோடில் இருப்பதைச் சற்று குறைத்திருக்கலாம்.

இந்தியாவில் இஸ்லாமியர்களின் மேல் சந்தேகம் என்னும் பெயரில் நிகழ்த்தப்படும் காவல்துறை வன்முறை பற்றி பேசிய விதத்தில் கவனிக்க வைக்கிறார் அறிமுக இயக்குநர் மனு ஆனந்த். குணசேகர் கொல்லியப்பன் பிடியில் இருக்கும் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி தப்பிப்பதற்கும், அனிஷா குரோஷியின் பிடியில் இருந்து ஒரு இஸ்லாமிய தீவிரவாதி தப்பிப்பதற்கும் இங்கு வித்தியாசம் உண்டு போன்ற வசனங்கள் இங்கு நிலவி வரும் மதம் குறித்த வெவ்வேறு பார்வைகளை அழுத்தமாக பதிவு செய்கிறது.

FIR விமர்சனம்

அஷ்வத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. படத்தில் வரும் பாடல்களுக்கும் படத்தில் பெரிய வேலை இல்லை. த்ரில்லர் படத்துக்கான வேகத்துடன் காட்சிகளை கட் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜிகே பிரசன்னா.

FIR விமர்சனம்

அதே சமயம், படத்தின் இறுதிக் காட்சிகளும், வரும் ட்விஸ்ட்டும் கதையின் நோக்கத்தையே முற்றிலுமாக சிதைக்கின்றனவோ என்கிற அளவுக்கு இருக்கின்றன. ஒருவர் யார் என்கிற அடையாளத்தை படமே முடிந்தாலும், அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கு சொல்லாமல் விடுவதன் மூலம், படத்தில் சொல்லப்படும் பொதுப்புத்தியின் மனநிலை சரிதானே என்கிற வாதத்துக்குத்தான் அது மேலும் வலு சேர்க்கிறது. தீவிரவாதம், வன்முறை போன்ற விஷயங்களில் நல்ல முஸ்லீம் வெர்சஸ் கெட்ட முஸ்லீம் கான்செப்ட் எடுப்பது நெருப்பின் மேல் நடப்பதற்கு ஒப்பானது. ஆனால், ட்விஸ்ட்டுக்காக இப்படியான காட்சிகளை எடுப்பது என்பது இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தியலை உருவாக்கவே பயன்படும்.

‘நாங்களே குண்டு வைப்போம், நாங்களே குண்டை எடுப்போம்’ என்கிற கதையாக நகரும் ஐதராபாத் காட்சிகள், விஷ்ணு விஷால் தப்பிக்கும் காட்சிகள் எல்லாமே ‘என்ன காமெடிங்க இது’ டைப்பில் நகர்கின்றன (கௌதம் மேனன் விலக்கிய பிறகு). தமிழ் சினிமாவிலிருந்து விவசாயத்தைக் காப்பாற்றுவதைப் போலவே ஹேக்கர்களையும் காப்பாற்ற வேண்டும். பிரேம்ஜி முதல் யூடியூப் விமர்சகர் இட்ஈஸ் பிரசாந்த் வரை ஹேக்கர்களின் அட்டூழியம் அளவு கடந்து போய்க்கொண்டு இருக்கிறது. இங்கிலீஷ் என்ற பெயரில் ஏதோவொன்றைப் பேசுவது, எப்போது பார்த்தாலும் பர்கர் தின்றுகொண்டே இருப்பது என ஹேக்கர்களுக்கான தமிழ் சினிமாவின் இலக்கணம் என்பது கர்ண கொடூரமாக இருக்கிறது.

FIR

த்ரில்லர் என்பதைக் கடந்து ஒரு சினிமாவாகத் தவறான அரசியலை பதிய வைத்துவிடும் அபாயத்தை விதைக்கிறது FIR.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.