இதுவரை காணாத மிகப்பெரிய மோசடி: வங்கிகளுக்கு ரூ. 22,842 கோடி நாமம் போட்ட நிறுவனம்

புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய மோசடி பற்றி தெரியவந்துள்ளது. நமது நாட்டில் பல வித மோசடிகளைப் பற்றி தினமும் கேள்விப்படுகிறோம். எனினும், இதுவரை நடந்துள்ள அனைத்து மோசடிகளையும் விழுங்கும் அளவு ஒரு பெரிய மோசடி நடந்துள்ளது. ஏபிஜி ஷிப்யார்டு மீது ஒரு மிகப்பெரிய வங்கி மோசடி வழக்குக்கான எப்ஐஆர்-ஐ மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்துள்ளது. 

இதில் சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குளறுபடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி மோசடி செய்ததாக ஏபிஜி ஷிப்யார்டு மற்றும் அதன் இயக்குநர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நிறுவனம் கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இதன் கப்பல் கட்டும் தளங்கள் குஜராத்தில் உள்ள தஹேஜ் மற்றும் சூரத்தில் உள்ளன.

முழு விவகாரம் என்ன?

ஏபிஜி ஷிப்யார்டு மற்றும் அதன் இயக்குநர்கள் 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏபிஜி கப்பல் கட்டும் தளம் மற்றும் அதன் இயக்குநர்கள் ரிஷி அகர்வால், சந்தானம் முத்துசாமி மற்றும் அஷ்வினி அகர்வால் ஆகியோர் வங்கிகளில் ரூ.22,000 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக மத்திய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஹிஜாப்: உயர்நிலை பள்ளிகள், கல்லூரிகளுக்கு பிப்ரவரி 16 வரை விடுமுறை 

பல வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி

எஸ்பிஐ அளித்த புகாரின் படி, இந்த நிறுவனம், எஸ்பிஐ-ல் இருந்து ரூ.2925 கோடி கடன் பெற்றது. ஐசிஐசிஐ-யிலிருந்து ரூ.7089 கோடி, ஐடிபிஐ-யிலிருந்து ரூ.3634 கோடி, பேங்க் ஆஃப் பரோடா-வில் (பிஓபி) இருந்து ரூ.1614 கோடி, பிஎன்பி-யில் இருந்து ரூ.1244 கோடி மற்றும் ஐஓபி-யிலிருந்து ரூ.1228 கோடி என ஏராளமான தொகை நிலுவையில் உள்ளன.

நீரவ் மோடியை விட பெரிய மோசடி

இந்த வழக்கில் சிபிஐ தற்போது அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. உரிய ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. முன்னதாக, வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கு மிகவும் விவாதிக்கப்பட்டது. நீரவ் மோடியின் பல சொத்துக்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

அவரை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியும் நடந்து வருகிறது. மேலும், விஜய் மல்லையா மீதான சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கும் இன்னும் தலைப்புச் செய்தியாக இருந்து வருகிறது. அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில், ஏபிஜி ஷிப்யார்டின் இந்த மோசடி வழக்கு மற்ற மோசடி வழக்குகளை சிறியதாக காட்டும் அளவுக்கு பூதாகாரமாகக் கிளம்பியுள்ளது. 

மேலும் படிக்க | வாகனம் ஓட்டும் போது போனில் பேசுவது குற்றம் ஆகாதா; நிதின் கட்கரி கூறியது என்ன! 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.