நாகர்கோவில்: குமரியில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.1 கோடிக்கான ஆவணங்கள், 91 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்மணி. இவரது கணவர் சேவியர் பாண்டியன், குமரி மாவட்ட நீதிமன்றங்களின் உதவி குற்றவியல் இயக்குநராக உள்ளார். தற்போது இவர்கள், நாகர்கோவில் பாலசுப்பிரமணிய வீதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகார் அடிப்படையில், நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் கண்மணி வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் கண்மணியும் சேவியர் பாண்டியனும் இருந்தனர். கண்மணியின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான, நாகர்கோவில் மீனாட்சிபுரம் மீனாட்சி கார்டனில் வசிக்கும் அமுதா வீட்டிலும் சோதனை நடந்தது. இவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.இன்ஸ்பெக்டர் கண்மணி வீட்டில் நேற்று காலை 4 மணி அளவில் சோதனை நிறைவு பெற்றது. சுமார் 22 மணி நேரம் நடந்த சோதனையில் வீட்டில் இருந்து ரூ.7 லட்சத்து 34 ஆயிரம் பணம், ரூ.91 லட்சத்துக்கான டெபாசிட் பத்திரங்கள், 91 பவுன் தங்க நகைகள், மேலும் ரூ. 7 லட்சத்துக்கான சீட்டு போட்டதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பதிவு செய்தல், நகைகளை எடை போடுதல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற பிறகே லஞ்ச ஒழிப்பு போலீசார் புறப்பட்டு சென்றனர். நகைகளை இன்ஸ்பெக்டரிடமே ஒப்படைத்தனர். கண்மணியின் நெருங்கிய தோழி அமுதா வீட்டில், ரூ.23 லட்சத்து 95 ஆயிரம் கடன் கொடுத்ததற்கான அத்தாட்சி பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், 3 பிரிவுகளில் இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் அவரது கணவர் சேவியர் பாண்டியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், இன்ஸ்பெக்டர் கண்மணி குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வருமானத்தை விட அதிகமாக 171.78 சதவீதம் சொத்து சேர்த்துள்ளார். இது தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதன் பேரில் அவர் மீதும், அவரது கணவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
