கோபி: கோபி அருகே ஆடு, நாய்களை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 2 இடங்களில் கூண்டு வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூர், காந்திநகர், செட்டியாம்பதியில் கடந்த வாரம் ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தை, கருக்கம்பாளையம் மற்றும் சுண்ணாம்புக்காரியூரில் இருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த டி.என்.பாளையம் வனசரகர் கணேஷ் பாண்டியன் தலைமையில், விளாமுண்டி வனத்துறையினர், கோவை சிறப்பு வனத்துறையினரும் கேமரா பொருத்தி சிறுத்தையை தேடி வந்தனர். இருப்பினும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.சிறுத்தை செட்டியாம்பதியில் வெங்கிடுசாமி என்பவரது 2 ஆடுகளை கடித்து கொன்றது. செட்டியாம்பதி டி.என். பாளையம் மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள பகுதி என்பதால் திருப்பூர் மாவட்ட வனத்துறையினரும் சிறுத்தையை தேடி வந்தனர். ஆனால் சிறுத்தை சுண்ணாம்புக்காரியூரிலிம், கருக்கம்பாளையத்தில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்திலும் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அங்கு வனத்துறையினர் 7 இடங்களில் கேமராக்களை வைத்து கண்காணித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுத்தை கூடக்கரை அருகே உள்ள கிராமத்தில், மயானம் அருகே 4 நாய்களை கடித்து கொன்றுள்ளது. தகவல் அறிந்த டி.என். பாளையம் வனசரகர் கணேஷ் பாண்டியன் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது நாய்களை கடித்து கொன்றது சிறுத்தைதான் என்பது உறுதியானது. தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் சுண்ணாம்பு பொடியும் தூவி வைக்கப்பட்டும், 4 இடங்களில் கேமராக்கள் பொருத்தியும் கண்காணிக்கப்பட்டது.நேற்று சிறுத்தை, எலத்தூர் செட்டிபாளையம் அருகே உள்ள பள்ளத்தூரில் நாய் ஒன்றை கடித்தது தெரிய வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகினர். கடந்த 10 நாட்களாக போக்குகாட்டி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக சென்னையில் உள்ள வைல்டு லைப் அலுவலகத்தில் வனத்துறையினர் சிறப்பு அனுமதி பெற்றனர். அதைத்தொடர்ந்து கூடக்கரை மற்றும் செட்டியாம்பாளையம் பள்ளத்தூர் பகுதியில் 2 இடங்களில் நேற்று டி.என்.பாளையம் மற்றும் விளாமுண்டி வனத்துறையினரோடு கால்நடை மருத்துவர் சதாசிவம் முன்னிலையில் வனத்துறையினர் கூண்டு வைத்து உள்ளனர்.
