தொடர் முகூர்த்தங்களால் ஓசூர் மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஓசூர்: தொடர் முகூர்த்தங்கள் காரணமாக, ஓசூர் மலர் சந்தையில் பூக்கள் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓசூரில் உள்ள மலர் சந்தையில் 150க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. இங்கு ரோஸ், பட்டன்ரோஸ், குண்டுமல்லி, செண்டு மல்லி, அரளி, ெஜர்பரா, சாமந்தி, மேரிகோல்டு என பலவகையான பூக்களும் விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆனேக்கல், மாலூர், கோலார் உள்ளிட்ட பகுதியிலிருந்தும், ஆந்திர மாநிலம் சித்தூர் ஆகிய பகுதியிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஓசூர் நகருக்கு வந்து மலர்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் கொள்முதல் செய்து எடுத்து செல்கின்றனர். இங்கு தினமும் சாதாரணமாக 150 டன் வரை விற்பனை நடந்து வருகிறது. விவசாயிகள் நேரடியாக அண்டை மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் சுமார் 200 முதல் 250 டன் வரை பூக்களை விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர் முகூர்த்தம் காரணமாக பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அரளிப்பூ கிலோ ரூ.200, சாமந்தி ரூ.100, கனகாம்பரம் ரூ.400, செண்டுமல்லி ரூ.30, பட்டன் ரோஸ் ரூ.150 என அனைத்து வகை பூக்களின் விலையும் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.