பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சியின் 18 வார்டுகளிலும் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அங்கு அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 16வது வார்டில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய நாற்காலிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று மாலை பறக்கும் படை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.இதையடுத்து காவேரி நகரில் ஒரு வீட்டில் பறக்கும் படை அலுவலர் குமார், காவல்துறை எஸ்ஐ குமரகுருபரன் ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு வீட்டுவாசலில் புத்தம்புதிய நாற்காலிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதற்குரிய ஆவணங்கள் வீட்டு உரிமையாளரிடம் இல்லாததால், 118 நாற்காலிகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய நாற்காலிகள் வைக்கப்பட்டு இருந்ததா என பறக்கும் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
