ராட்சத பலூன் பறக்கவிட்டு வாக்குப்பதிவு விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. நேற்று திருமழிசை பேரூராட்சியில் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். ஆவடி காவல் ஆணையர் சந்தீப்  ராய் ரத்தோர், மாவட்ட தேர்தல்  பார்வையாளரும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டஇயக்குனருமான கணேசன் முன்னிலை வகித்தார். இதில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கையெழுத்திட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயார் செய்யப்பட்ட பெரிய அளவிலான ராட்சத பலூனை பறக்கவிட்டனர். வாக்காளர்கள் இடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் காவல் துணை ஆணையர் மகேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் கி.ரவி, வேளாண்மை உதவி இயக்குனர் சங்கரி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் கல்பனா, சாந்தி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சேகர், மதியழகன், ஜானகிராமன், இளநிலை உதவியாளர் ஜோசப், பாண்டியன் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.