இணையே… என் உயிர் துணையே! – இன்று காதலர் தினம்

காதல் என்று சொல்லும் போதே மனசெல்லாம் றெக்க கட்டி பறப்பது போல ஒரு உணர்வு தோன்றுகிறது. காதல் என்பது காற்றை போல. அதை உணரத்தான் முடியும். பார்க்க முடியாது. கன்னம் சுருங்க காதலியும், மீசை நரைத்திட காதலனும் வாழ்வின் கரைகளை காணும் வரை தொடர்வதுதான் காதல் என்கின்றனர் கவிஞர்கள்.

உடலுக்கு இதயம் எப்படி முக்கியமானதோ, அதே போல, வாழ்க்கைக்கு காதல் உயிர் போன்றதாக மதிக்கப்படுகிறது. ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, நிறத்தை கடந்து இதயங்கள் இணைவதுதான் உண்மையான காதல். உலகம் முழுவதும் காதலர்களால் ஆண்டு தோறும் பிப்., 14ல் ‘காதலர் தினம்’ கொண்டாடப்படுகிறது.

காதலர்கள் மட்டுமின்றி, திருமணம் செய்த தம்பதியர்களும் பரிசுகள், வாழ்த்து அட்டைகள் வழங்கி தங்களது அன்பை பரிமாறிக் கொள்கின்றனர். காதல் பற்றி தமிழ் இலக்கியங்களான திருக்குறள், குறுந்தொகை, ஐங்குறுநுாறு, புலவர்கள், கவிஞர்கள், தத்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவரிக்கின்றனர்.

எப்படி வந்தது:

‘காதலர் தினம்’ உருவான கதை சுவராஸ்யமானது. காதலர் தினத்துக்கு முன்னோடியாக கருதப்படும் வேலன்டைன் துறவி, ரோம் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர். 14ம் நுாற்றாண்டில் ரோம் அரசர் இரண்டாம் கிளாடியஸ், இளைஞர்களை போர்களத்திற்கு அழைத்தார். இதற்கு வரவேற்பு இல்லாததால் திருமணத்திற்கு தடை விதித்தார் எனவும், வேலன்டைன் எனும் பாதிரியார் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவரது நினைவுநாளையே ‘வேலன்டைன் தினமாக’ இளைஞர்கள் கொண்டாட தொடங்கினர். 20ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில்தான் வேலன்டைன் தினம் ‘காதலர் தினமாக’ மாறியது.

எது உண்மை காதல்:

இன்றும் உண்மையான காதல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. சில காதலர்கள் வாழ்க்கை பற்றி எவ்வித தெளிவான கருத்தும் இல்லாமல் அழகு, பணம், வேலை போன்ற காரணங்களை பார்த்து அவசரப் பட்டு காதலில் விழுகின்றனர். இந்த காதல் விரைவில் வீழ்ந்து விடுகிறது. விபரீத காதலையும் பார்க்க முடிகிறது.

தன்னை காதலிக்காத குற்றத்திற்காக பெண்ணிற்கு பல்வேறு இடையூறுகள் கொடுக்கும் அவலமும் அரங்கேறுகிறது. எண்ணங்களையும் எதிர்பார்ப்பு களையும் பகிர்ந்துகொள்ள காதலி அல்லது காதலன் கிடைத்துவிட்டால், அந்த வாழ்க்கை தமிழ் போல் அமுதமாய் இனிக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.