உத்தரகாண்ட், கோவா தேர்தல் – நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!

உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில், நாளை ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தரகாண்ட்
மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, நாளை ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜகவுக்கும் – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தை பொறுத்தவரை, ஆளும் பாஜக, கடந்த ஓராண்டில் மூன்று பேரை முதலமைச்சர்களாக பதவி அமர்த்தி உள்ளது. அக்கட்சிக்கு மக்களிடையே அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் சிங் ராவத் தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளது.

உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதே போல், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் கோவா மாநிலத்திலும் நாளை ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இங்கு பாஜக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இங்கு நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே உத்தர பிரதேச மாநிலத்தில் 55 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.