செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள்

சென்னை: பொதுமக்கள் அவசரத் தேவைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ குறிப்பிட்ட செயலிகளின் மூலம் கடன் வாங்க வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சலோன் ஆஃப் செயலிகள் மூலம்மக்களுக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, பின்னர் தொந்தரவு செய்த மோசடிக் கும்பலை சென்னை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மேலும், கடன் செயலிகளைக் கண்டறிந்து, அவற்றை ப்ளேஸ்டோரில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இத்தகைய தீவிர தடுப்பு நடவடிக்கைகளால் குறைந்திருந்த கடன் செயலிகள் தற்போது மீண்டும் ப்ளேஸ்டோர் மற்றும் வெப்சைட்டுகளில் பரவலாக அதிகரித்து வருகின்றன.

செயலிகளின் மூலம் கடன் வாங்கும்போது, கடன் பெறுபவரின் செல்போனில் இருக்கும் தொடர்பு எண்கள், புகைப்படம் மற்றும் தனிப்பட்டவிவரங்களை அந்த செயலிகள்சேகரித்து வைத்துக்கொள் கின்றன.

30% பிராசஸிங் கட்டணம்

கடன் வாங்கும் தொகையில் சுமார் 30 சதவீதம் பணத்தை பிராசஸிங் கட்டணமாகப் பிடித்துக்கொண்டு, மீதமுள்ள பணம் கடன் வாங்குபவரின் வங்கிக் கணக்குக்கு வரவு வைக்கப்படும்.

உதாரணமாக ரூ.5 ஆயிரம் கடனுக்கு விண்ணப்பித்தால், ரூ.3,500 மட்டுமே கிடைக்கும். ரூ.1,500 பிராசஸிங் கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும்.

இந்தப் பணத்தை திருப்பிக் கட்டுவதற்கு 7 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும். அதற்குள் ரூ.5 ஆயிரம் பணத்தையும் திருப்பிச் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் தினமும் ரூ.200 முதல் ரூ.500 வரை வட்டி ஏறிக்கொண்டேசெல்லும். 10 நாட்களில் பணம் திருப்பிச் செலுத்தாதவர்களை போன் மூலம் மிரட்டுவார்கள்.

மேலும், கடன் பெற்றவர்களின் நண்பர்கள், உறவினர்களின் செல்போனுக்கு, கடன் பெற்ற நபர் குறித்து தவறாகவும், ஆபாசமாகவும் குறுஞ்செய்திகளை மோசடிக் கும்பல் அனுப்புகிறது. இதனால், லோன் செயலிகள் மூலம் கடன் பெறுவோர், பணிபுரியும் இடத்திலும், உறவினர்களிடமும் பல்வேறு அவமானங்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன், பெரும்மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பெரிய அளவிலான பண இழப்பும் ஏற்படுகிறது.

எனவே, பொதுமக்கள் அவசரத் தேவைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இத்தகைய லோன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம். இவ்வாறு காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.