தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தபோது ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலி

கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் மெகுனிபூர் மாவட்டம் ரங்கேமகி என்ற பகுதியில் கங்கஸ்வதி ஆறு ஓடுகிறது. இதன் அருகே ரெயில்வே தண்டவாளம் உள்ளது. சிறந்த சுற்றுலா தலமாக திகழும் இந்த பகுதிக்கு தினமும் ஏராளமானோர் வருவது வழக்கம்.
நேற்று சில இளைஞர்கள் இங்கு வந்து இயற்கை அழகை ரசித்தனர். திடீரென அவர்கள் ரெயில்வே தண்டவாளத்தில் நின்று ஆர்வத்துடன் ‘செல்பி’ எடுத்தனர்.
அப்போது அந்த வழியாக மெகுனிபூரில் இருந்து ஹவுராவுக்கு ரெயில் வந்தது. தண்டவாளத்தில் இளைஞர்கள் கூட்டமாக இருப்பதை பார்த்ததும் என்ஜின் டிரைவர் ‘ஹாரன்’ அடித்து எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து அவர் ஹாரன் அடித்துக்கொண்டிருந்தார்.
ஆனால் இதை அவர்கள் கவனிக்கவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் செல்பி எடுத்துக்கொண்டிருந்த 3 பேர் மீது ரெயில் பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மிதுன் கான் (வயது 36), அப்துல்கெயின் (32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தங்கள் கண்முன்னே நண்பர்கள் 2 பேர் இறந்தது மற்ற நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இது போன்ற உயிர்பலியை தடுக்க தண்டவாளத்தில் நின்று யாரும் செல்பி எடுக்க கூடாது என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.