4வது நாளாக கைத்தறி பட்டு உற்பத்தி நிறுத்தம் ரூ.200 கோடி வருவாய் இழப்பு

சேலம்: பட்டு நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி சேலத்தில் 4வது நாளாக கைத்தறி பட்டு உற்பத்தி நிறுத்தத்தால் ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் பட்டு நூல், கர்நாடகா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. 2020 டிசம்பர் முதல் வாரத்தில் பட்டு நூல் கிலோ ரூ.3,500 முதல் ரூ.3,600 வரை விற்று வந்தது. அதன் விலை தற்போது இரட்டிப்பாகி ரூ.7,000 முதல் ரூ.,7200 வரை விற்கப்படுகிறது. இந்த பட்டு நூல் விலை உயர்வு பட்டு ரகங்களின் மேல் ஏற்றப்படுவதால் விற்பனையும் சரிந்து உள்ளது. பட்டு நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் வரும் 23ம்தேதி வரை உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நங்கவள்ளி, வனவாசி, மேட்டூர், சிந்தாமணியூர்,கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 10,000 சுத்தப்பட்டு கைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு பணிபுரியும் 15 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதுகுறித்து சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி கைத்தறி சுத்தப்பட்டு ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் பலராமன் கூறும்போது, சேலம் மாவட்டத்தில் நேற்று 4வது நாளாக 10,000 கைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தினமும் ரூ.50 கோடி வீதம் இதுவரை ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உடனே பட்டு நூல் விலையை ஒன்றிய அரசு குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விலையை குறைக்கவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.