BB Ultimate -14: வெளியேறுகிறார் சுஜா! காரணம் என்ன? வனிதாவை கேள்வி கேட்பாரா கமல்?

அல்டிமேட் சீசனிற்கும் வீட்டின் தலைவர் பதவிக்கும் ராசியில்லை போல. ஏதோவொரு கண்டம் இதில் இருக்கிறது. கடந்த வாரத்தில் வீட்டின் தலைவர் ஆன கையோடு சுரேஷ் எலிமினேட் ஆனார். இப்போது சுஜா அடுத்த வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆம், அதேதான். இந்த வாரத்தில் சுஜாதான் எலிமினேட் ஆகியிருக்கிறார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். வீட்டுப்பணி, டாஸ்க் என்று அனைத்திலும் சின்சியராக செயல்பட்டதாக சக போட்டியாளர்களே சுஜாவைப் பாராட்டியிருக்கிறார்கள். ‘நீதிடா. நேர்மைடா..’ என்று செயல்பட்டவர் சுஜா. அவரை விடவும் சுமாரான போட்டியாளர்கள் இன்னமும் அங்கு நீடிக்கும் போது சுஜா வெளியேற்றப்படுவதின் காரணம் என்ன? நமது வாக்காளர்களைப் புரிந்து கொள்ளவே முடியாது. லெஃப்ட் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் வண்டியைத் திருப்புவார்கள்.

எபிசோட் -14-ல் நடந்தது என்ன?

காலைப் பாடலுக்குப் பின் தாமரைக்கு ஓர் அறிவிப்பு. “இனி நீங்கள் அபிராமியின் குரலாக நீடிக்க வேண்டாம்” என்று பிக் பாஸ் அறிவித்தார். அதற்கு சந்தோஷப்படுவதா, வேண்டாமா என்று தாமரை தயங்கி மயங்குவதற்குள் “அடுத்ததாக வனிதாவின் குரலாக மாற வேண்டும்” என்று உண்மையிலேயே ஒரு வெடிகுண்டு வந்து விழுந்தது.

‘நான் பேச நினைப்பதெல்லாம், நீ பேச வேண்டும்’ என்கிற பாடல் வரி, மாதிரி ஒருவர் தான் சொல்ல நினைப்பதை தாமரையின் வாயால் சொல்ல வேண்டும் என்பதுதான் இந்த டாஸ்க்கின் விதி. ஆனால் பல சமயங்களில் ஒருவர் சொன்னதையே எதிரொலி மாதிரி மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார் தாமரை. பாலாஜியை “டேய் பாலாஜி. வந்து பாத்திரம் கழுவுடா.” என்று வனிதா ஏகவசனத்தில் அழைக்க அதையே தானும் வழிமொழிந்து மகிழ்ந்தார் தாமரை. (பிறகு இந்தச் சந்தர்ப்பம் கிடைக்காது!). தாமரையின் டாஸ்க்கை ஜூலி சுவாரஸ்யப்படுத்தவில்லை என்கிற புகாரை அபிராமிக்கும் பொருத்திப் பார்க்கலாம். அவரும் எதையும் செய்தது போல் தெரியவில்லை.

பாலா

ஜூலி கார்னர் செய்யப்படுகிறாரா?

பிடித்தமான போட்டியாளர்களுக்கு Heart-ம், இனிமேல் பிடிக்கவிருக்கிற போட்டியாளர்களுக்கு Block-ம் அடையாளச் சின்னமாக வழங்கும் வைபவம் ஆரம்பித்தது. இதில் போட்டியாளர்களின் உள்ளே ஒளிந்திருந்த நட்பும், பகையும், நேசமும் புகைச்சலும், கண்ணீரும் சிரிப்பும் வெளிப்பட்டன.

‘பிடிக்காத போட்டியாளர்’ என்கிற வரிசையில் ஜூலிக்கு அதிக முத்திரைகள் விழுந்தன. வீட்டில் பெரும்பாலோனோர் அவரை கார்னர் செய்கிறார்களோ என்கிற பரிதாபம் ஒருபக்கம் இருந்தாலும் அவற்றைச் சரிசெய்வதற்கான முயற்சிகளை ஜூலியும் எடுப்பதில்லை. தனது தேர்வின் போது நிரூப் இதை சரியாக சுட்டிக் காட்டினார். “நீ எந்தவொரு பிரச்சினையையும் சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று பேசி சரிசெய்து கொள்ளலாம். ஆனால் அதற்கான முயற்சிகளை நீ எடுப்பதில்லை” என்று நிரூப் சொன்னதை தலையாட்டுவதின் மூலம் ஒப்புக் கொண்டார் ஜூலி. ஹார்ட் தேர்வு செய்ய தனக்கு வாய்ப்பு வரும் போது ஜூலியால் கண்கலங்குவதை கட்டுப்படுத்தவே முடியவில்லை. “இங்க அபிநய் கூடத்தான் எனக்கு நல்லா கனெக்ட் ஆகியிருக்கு. அவருக்கு ஹார்ட் தரேன்” என்று தெய்வத்திருமகள் சாரா மாதிரி கை விரித்தபடியே அவரை நோக்கி ஓட, சட்டென்று எழுந்து வந்து அரவணைத்துக் கொண்டார் அபிநய்.

வனிதா மீது ‘அக்கா’ பாசத்தை ஓவராகப் பொழிந்து ஹார்ட் கொடுத்தார் அபிராமி. “கிராமத்துல உங்களுக்கு தெரிஞ்சவங்க நிறைய பேர் இருப்பாங்க.. ஆனா சிட்டில உனக்கு ஒரு அக்கா இருக்கா. நான்தான் அது” என்று தாமரையிடம் சென்டியைப் பிழிந்து ஆச்சரியப்படுத்தினார் வனிதா. “இந்தப் பையன் கூட என்ன பிரச்சினைன்னே தெரியலை. கனெக்ட்டே ஆக மாட்டேங்குது. என் தம்பி மாதிரித்தான் இவனைப் பார்க்கிறேன்” என்று சொல்லும் போதே இயலாமல் தேம்பித் தேம்பி அழுதார் சுஜா. அவர் குறிப்பிட்டது ஷாரிக்கை. “போய் ஒரு தடவை அவங்களை ஹக் பண்ணிக்கோடா” என்று மற்றவர்கள் வற்புறுத்தினாலும் ஷாரிக் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தார். “விடுங்க.. இதெல்லாம் தானா நடக்க வேண்டிய விஷயம்” என்று அபிநய் சொன்னது சரியான விஷயம்.

“அந்தக் குழந்தையே நீதான் நிரூப்”

“ஒரு குழந்தையை வாக்கிங் கூட்டிட்டு போற மாதிரிதான் நிரூப் எனக்குத் தெரியறான். போன சீசன் பார்த்து அவனை ஏதோ அரக்கன் மாதிரி நெனச்சிட்டு இருந்தேன். ஆனா வளர்ந்த குழந்தை நிரூப்” என்று “அந்தக் குழந்தையே நீங்கதான்” என்கிற ரேஞ்சிற்கு நிரூப்பைப் புகழ்ந்தார் அனிதா. (ஓங்கி உயரமாக இருக்கும் ஆறடி நிரூப்பை பாப்பா டிரஸ்ஸில் தவழ்ந்து வருவதை கற்பனை செய்து பார்க்கவே கலவரமாக இருக்கிறது!). “போன முறை நான் கொடுத்த ஹார்ட்டை பாலா அவமதிச்சிட்டான். நான் ஏதோ சும்மா சொன்ன மாதிரி நெனச்சிட்டான். அது என் மனதை பாதிச்சது” என்று சொன்ன அனிதா, பாலாவிற்கு பிளாக் முத்திரையைக் கொடுத்தார்.

அபிராமி

“நானும் என்னென்னமோ காமெடியா பேசிப் பார்க்கறேன்.. இந்தம்மா கூட மட்டும் இன்னமும் கனெக்ட் ஆக முடியலை” என்று தாமரையைக் குறிப்பிட்டார் பாலாஜி. “என்னது! நீங்க காமெடி பண்ணுவீங்களா?” என்று அதிர்ச்சியாக சொல்லி சபையை கலகலக்க வைத்தார் நிரூப். அபிராமிக்கு ஹார்ட் தந்து இன்ப அதிர்ச்சி தந்தார் நிரூப். “உங்களுக்கே தெரியும். அவ என்னோட எக்ஸ்..” என்று ஆரம்பித்தார் நிரூப். (போதுண்டா. சாமி. இதை எத்தனை முறைதான் சொல்லுவே? இதென்ன பாரத ரத்னா விருதா?!) “நான் அவ கிட்ட பேசப் போகும் போதெல்லாம் அவ ஒதுங்கிப் போற மாதிரி இருக்கு. ரொம்ப வருஷம் பழகியிருக்கோம். ரெண்டு பேருக்குமே அவங்கங்க ப்ளஸ், மைனஸ் தெரியும். கடந்த கால விஷயங்களையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு பேசலாம்..” என்று நிரூப் பேசியது முதிர்ச்சியான அணுகுமுறையாக இருந்தது. நிரூப்பின் பேச்சை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த அபிராமி “அடப்பாவி.. நானா பேச மாட்டேங்கறேன்?!” என்று பதில் புகார் வைத்தார்.

நிரூப்

“பாலாவிற்காக ஹார்ட் என்ன.. கிட்னி, நுரையீரல்.. எல்லாத்தையும் தருவேன்” என்று நான்வெஜ் வாசனையுடன் பாசத்தைக் கலந்து காமெடியாக கொட்டினார் சுருதி. இதனால் பாலாவே கண்கலங்கும் ஆச்சரியமெல்லாம் நடந்தது. “என்னதான் சண்டை போட்டாலும் இவங்க மேல பாசம் இருக்கு” என்று தாமரைக்கு ஹார்ட் தந்து ஆச்சரியப்படுத்திய அபிநய், கனெக்ட் ஆகாத நபராக நிரூப்பைத் தேர்ந்தெடுத்தார். இந்த டாஸ்க் முடிந்ததும், வெளியில் வந்த சுருதியிடம் “நான் பாலா மீது ஒரு பிரச்சினை சொன்னேன். உனக்கும் சில பிரச்சினைகள் இருக்கு. இருந்தாலும் நீ பாலாவிற்கு ஹார்ட் கொடுத்தியே?!” என்று ஆட்சேபித்துக் கொண்டிருந்தார் அனிதா. “அது இன்னொருபக்கம் அப்படியேதான் பத்திரமாக இருக்கு” என்றார் சுருதி.

ஸ்பின்வீல் அம்பு – போட்டியாளர்களிடம் வெளிப்பட்ட வம்பு

‘இருளும் வெளிச்சமும் இருக்கிற மாதிரி மனுஷனா இருந்தா நல்லதும் கெட்டதும் இருக்கும்” என்கிற விஷயத்தை வைத்து அடுத்த டாஸ்க்கை ‘விக்ரம் வேதா’ என்கிற தலைப்பில் ஆரம்பித்தார் பிக் பாஸ். ஸ்பின் வீலைச் சுற்றி, முள் யார் பக்கம் நிற்கிறதோ, அவரைப் பற்றி ஒரு நல்ல விஷயத்தையும், கெட்ட விஷயத்தையும் சபையில் சொல்ல வேண்டும். இதில் சுருதியின் பக்கமே அம்பு பலமுறை வந்து நின்றது.

“உனக்கு நல்ல திறமை இருக்கு. ஆனா உனக்காகவும் நீ யோசி” என்று சுருதியைப் பற்றிச் சொன்னார் வனிதா. “டாஸ்க் முதற்கொண்டு வந்த வேலையை சரியா பார்க்கறாங்க.. ஆனா வீட்டு வேலைகளை பாதியிலேயே விட்டுடறாங்க” என்று சுருதியைப் பற்றி சொன்னார் பாலாஜி. “தானும் மகிழ்ச்சியா இருந்து சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியா வைத்திருப்பது அபிராமியின் நல்ல குணம். ஆனா சமயங்கள்ல அவங்க குழந்தை மாதிரி செயல்படறதை மாத்திக்கலாம்” என்றார் சிநேகன். (‘சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்து ஜெனிலியா மாதிரி இருக்காதே’ன்னு சொல்றார் போல).

நிரூப்

பிக் பாஸ் வீட்டில் ஜூலிக்கு நல்ல சான்றிதழ் தரும் ஒரே நபர் பாலாதான். “இந்தப் பொண்ணு கிட்ட பொறுமை இருக்கு. சகிப்புத்தன்மை இருக்கு. அஞ்சு மணி நேரம் உக்காந்து வைரத்தைப் பாதுகாக்கற வேலைல்லாம் ரொம்ப கஷ்டமானது. ஆனா எங்க, எப்படிப் பேசணும்னு தெரியல. பேசத் தேவையில்லாத நேரத்தில் கூட பேசிடறாங்க” என்று ஜூலியின் ப்ளஸ் மற்றும் மைனஸ் பாயிண்ட்டுகளைச் சுட்டிக் காட்டினார் பாலா. “என் வழி.. தனி வழின்னு தனிக்காட்டு ராஜாவா இருக்கான். இந்த விஷயம் பிடிச்சிருக்கு. ஆனா.. மத்தவங்க சொல்றதை இவனாவே ஒரு மாதிரி புரிஞ்சுக்கறது சரியில்லாத விஷயம்” என்று பாலாவைப் பற்றி சொன்னார் சுருதி.

“ஒவ்வொருத்தரையும் பத்தி நல்லா கணிச்சு வெச்சிருக்காங்க.. ஆனா ஒரு சின்ன வார்த்தைல கூட தவறு கண்டுபிடிச்சு வியாக்கியானம் பண்றாங்க” என்று அனிதாவைப் பற்றி ஆராய்ச்சி செய்தார் தாமரை. “பாசக்காரப் பய.. ஆனா டாஸக்கிற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிஞ்சுடுவான்.. அதுதான் எனக்குப் பிடிக்காது” என்று நிரூப்பைப் பற்றி சொன்னார் தாமரை.

“நான் என்ன சொல்றேன்னா..” ஸ்பேஸ் தராமல் பேசிய அனிதா!

இந்த டாஸ்க் முடிந்ததும் வெளியில் வந்த பாலாவும் அனிதாவும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். “ஹார்ட் தந்த விஷயத்தில் உங்களை அவமதிக்கணும்னு எல்லாம் நான் சொல்லல. நான் சும்மா காமெடிக்காகத்தான் சொன்னேன்” என்பதை விதம் விதமான வார்த்தைகளில் பாலா விளக்கம் தர, “இல்ல. நான் என்ன நெனச்சேன்னா…” என்று சுற்றிச் சுற்றி கேட்டு இம்சை தந்தார் அனிதா. பாலாவின் கிண்டலால் தான் அவமதிக்கப்பட்டதாக அனிதா உணர்ந்திருந்தால் இதை டாஸ்க்கிற்கு முன்பே கேட்டு தெளிவாக்கியிருக்கலாம். உள்ளுக்குள்ளேயே வைத்திருந்து சபையில் சொல்லியிருக்கத் தேவையில்லை. நாமினேட் சமயத்தில் சொல்வதற்கு ஏதாவது காரணம் வேண்டுமே என்கிற காரணத்திற்காகவே சிலர் பஞ்சாயத்தை ஆறாமல் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

சுருதி – சினேகன்

‘ராக்கெட் ராஜா’ என்கிற தலைப்பில் அடுத்ததாக ஒரு ஜாலியான விளையாட்டு. ஆறு பேர் கொண்ட அணியாக வீடு இரண்டாகப் பிரிய வேண்டும். ஒரு அணியில் உள்ள இருவர் பேப்பர் ராக்கெட்டுக்களை வீச, எதிரில் உள்ள நால்வர் அதை தனது கையில் உள்ள பலகையில் சரியாகப் பிடிக்க வேண்டும். எந்த அணி அதிகமாகப் பிடித்து அதிக எண்ணிக்கையில் ராக்கெட்டுகளைச் சேர்க்கிறதோ அவர்களுக்கே வெற்றி. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தோல்வியடைந்த அணி, வெற்றி பெற்ற அணிக்கு 600 பிக் பாஸ் பாயிண்ட்டுகளைத் தந்து விட வேண்டும்.

ஆட்டம் ஆரம்பித்தது. பாலாவும் சிநேகனும் ராக்கெட்டுக்களை எறிய எதிரில் உள்ளவர்கள் அதைப் பிடிப்பதற்கு ஆரம்பத்தில் மிகவும் தடுமாறினார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு இது சற்று பழகி விட்டது. பிடிப்பவர்கள் மட்டும் சாமர்த்தியமாக இருந்தால் போதாது, எறிபவர்களும் பலகையில் சென்று விழுமாறு இலகுவாக வீச வேண்டும். முதல் அணி டெமொ காட்டி விட்டதால் இரண்டாவது அணிக்கு இந்த விஷயம் சாதகமாகப் போய் விட்டது. ஷாரிக் பாய்ந்து பாய்ந்து பிடித்து ஆச்சரியப்படுத்தினார். இறுதியில் ஷாரிக் இருந்த அணி வெற்றி பெற்று 600 பாயிண்ட்டுகளை சம்பாதித்தார்கள்.

வனிதாவை மறைமுகமாக இடித்துரைத்தாரா சிநேகன்?

அடுத்த வார தலைவர் பதவிக்கான போட்டியின் இறுதிக்கட்டம். இதில் Trending Player ஆன வனிதாவும், போட்டிக்கு தகுதி பெற்றிருந்த சுஜாவும் மோதினார்கள். CAPTAINCY என்கிற வார்த்தை செதுக்கப்பட்டிருக்கும் பலகையில் சம்பந்தப்பட்ட எழுத்துக்களைச் சென்று சரியாகப் பொருத்தவேண்டும். ஆனால் இதைக் கண்ணைக் கட்டிக்கொண்டு செய்ய வேண்டும். வனிதாவும் சுஜாவும் வேக வேகமாகச் செயல்பட்டார்கள். அய்யோ! தலை சுத்துதே’ என்று அனத்தினார் வனிதா. ‘சுஜாதான் அடுத்த வார தலைவராக வேண்டும். வனிதா வேண்டாம்’ என்றுதான் போட்டியாளர்கள் உள்ளுக்குள் பிராத்தனை செய்திருக்க வேண்டும். (பார்வையாளர்களுக்கும் கூட அப்படித்தான் தோன்றியிருக்கும்). அவர்களின் பிரார்த்தனை பலித்தது. சுஜா வெற்றி பெற்று அடுத்த வாரத்தின் தலைவரானார். (ஆனால்?!…).

தனது தலைவர் பதவியை சுஜாவிடம் சிநேகன் ஒப்படைக்க வேண்டிய நேரம். “உங்க கேப்டன் அனுபவத்தைப் பற்றி பேசுங்க” என்று பிக் பாஸ் சொல்ல, இதற்கு சிநேகன் ஆற்றிய உரை உண்மையிலேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தாமரை கண்கலங்கி அழுது விட்டார். மற்றவர்களும் நெகிழ்ந்தார்கள்.

captaincy டாஸ்க்

“இது நான் சம்பாதிச்ச பதவி இல்ல. தாத்தா தந்துட்டுப் போன பொறுப்பு. துறை சார்ந்து ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா பதவிகளை நியமிச்சேன். நட்பா உங்களை கையாளலாம்ன்னு நெனச்சேன். ஆனா உங்கள்ல பலர் எனக்கு ஒத்துழைப்பு தரலை. உதாரணத்திற்கு ஆங்கிலம் கலந்து பேசுவதை தவிர்க்கலாம்ன்னு சொன்னேன். கிராமத்துல கூட இதைப் பார்க்கறாங்க. ஆனா யாரும் கேட்கலை. அடுத்த வார தலைவர்களையாவது தயவு செய்து மதிங்க.. கமல் சார் கேட்டா கூட நான் எனக்கு ஜீரோ மதிப்பெண்தான் தந்துப்பேன். பிக் பாஸ் வீட்டுக்குன்னு தனியா ரூல்ஸ் இருக்கற மாதிரி, வீட்டோட கேப்டன் சொல்ற ரூல்ஸ் தனியா இருக்கு. தயவு செஞ்சு அதை ஃபாலோ பண்ணுங்க. நானு… தாமரைல்லாம் கிராமத்து பின்னணில இருந்து வந்தவங்க.. எங்களுக்கெல்லாம் பிக்பாஸ் என்பது பெரிய களம்..” என்று சிநேகன் கண்கலங்க, மற்றவர்களுக்கு இந்த நெகிழ்வுணர்ச்சி பரவி கலங்க ஆரம்பித்தார். (அப்ப எல்லோருக்கும் ஏன் 9 மதிப்பெண்களை தாராளமா அள்ளி வீசினிங்க கவிஞரே?!)

சிநேகனின் குற்றச்சாட்டில் பெரும்பான்மையான பங்கு வனிதாவின் மீது இருக்கலாம். பிக் பாஸையே மதிக்காதவர், சிநேகனையா மதிக்கப் போகிறார்? எனவேதான் சிநேகன் மறைமுகமாக இதைச் சுட்டிக் காட்டினார் என்று தோன்றுகிறது. சிநேகன் பேசும் சமயத்தில் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தார் வனிதா. “அக்கா தப்பா நெனச்சுப்பாங்களோ?” என்று சிநேகனுக்குள் பீதி ஏற்பட்டதோ, என்னமோ, “வனிதாவின் பிடிவாதத்தை ஒரு கட்டத்தில் ரசிக்க ஆரம்பித்து விட்டேன்” என்று அவராகவே சரண் அடைந்தார். ‘யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவது சிநேகனின் நல்ல குணாதிசயம். இதுவேதான் அவருக்கு பல சமயங்களில் பலமாகவும் சில சமயங்களில் பலவீனமாகவும் இருக்கிறது.

இந்த நாளை கமலாவது சுவாரசியமாக்குவாரா?

“சிநேகன்தான் என் குரு. அவரோட ஆசிர்வாதம் எனக்கு வேணும்” என்று சிநேகனையும் தாண்டி சென்டி முறுக்கு பிழிய ஆரம்பித்தார் அடுத்த வார தலைவராக பதவியேற்றுக் கொண்டா சுஜா. “இந்தப் பதவிக்கு நான் வருவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. நாம காலைல எழுந்ததும் நல்லா தோற்றமளிக்கணும்-ன்னு சிறப்பா டிரஸ் பண்ணி அழகா காட்டிக்கறோம். நாம மட்டும் அழகா இருந்தா போதாது. நம்மைச் சுற்றி இருக்கற இடத்தையும் அழகா வெச்சுக்கணும்” என்று சுஜா சொன்ன போது “அப்படிச் சொல்லுக்கா” என்று எல்லோருமே கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். (அப்ப குப்பை போடறது யாரு?!) தாமரையை அழைத்த பிக் பாஸ், “மற்றவர்களுக்கு குரலாக இருக்கும் பிக் பாம் டாஸ்க் முடிந்தது” என்று அறிவிக்க சந்தோஷத்தில் வீடெங்கும் துள்ளிக் குதித்தார் தாமரை. பிறகு சுரேஷ் பரிசாக அளித்து விட்டுச் சென்றிருந்த 5000 கரன்ஸியை தாமரைக்கு அளித்தார்கள். “அய்யோ.. தாத்தா. பரிசும் கொடுத்துட்டு கூடவே ஆப்பையும் தந்துட்டுப் போனியே” என்று சந்தோஷத்தில் அனத்தினார் தாமரை.

ஆக.. பிக் பாம் என்பதின் அர்த்தம் இப்போது தெளிவாக புரிந்து விட்டதால், அடுத்து வெளியேறும் சுஜா, யாருக்கு பரிசும், யாருக்கு வெடிகுண்டும் தருவார் என்பதைப் பார்க்க வேண்டும். இன்று கமல் வரும் நாள். எதையாவது அவர் சுவாரசியமாகச் செய்தால்தான் இந்த நாள் பொன்னாளாக மாறும். குறிப்பாக ‘விரும்பினால்தான் டாஸ்க்கில் பங்கேற்பேன்’ என்று கெத்தாக அழிச்சாட்டியம் செய்யும் வனிதாவை நிற்க வைத்து கமல் கேள்வி கேட்க வேண்டும். செய்வாரா?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.