அமைதியாக நடந்த ஒரேகட்ட தேர்தல் கோவா-79%, உத்தரகாண்ட்-62% வாக்குப்பதிவு: உ.பி.யில் 2ம் கட்டமாக 55 இடங்களிலும் நடந்தது

புதுடெல்லி: கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நேற்று ஒரே கட்டமாக எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இதில், கோவாவில் 79% வாக்குகளும், உத்தரகாண்டில் 62% வாக்குகளும் பதிவாகின. உத்தரபிரதேசத்தில் 55 தொகுதிகளுக்கு நடந்த 2ம் கட்ட தேர்தலில் 60% வாக்குகள் பதிவாகின. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை கடந்த மாதம் 8ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக, கடந்த 10ம் தேதி 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், 60 சதவீத வாக்குகள் பதிவானது. இந்நிலையில், 2ம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதே போல, 70 தொகுதிகள் கொண்ட உத்தரக்காண்ட் மாநிலத்திலும், 40 தொகுதிகள் கொண்ட கோவாவிலும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. உ.பி.யில் 586 பேர், உத்தரக்காண்டில் 623 பேர், கோவாவில் 301 பேர் வேட்பாளராக களம் இறங்கினர். மேற்கண்ட தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் கடந்த 12ம் தேதி மாலையுடன் ஓய்ந்தது.   உத்தரபிரதேசம், கோவாவில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை  வாக்குப்பதிவு நடந்தது. உத்தரகாண்டில் மலை பிரதேசங்கள் அதிகமாக உள்ளதால்,  அங்கு காலை 8 மணிக்கு  வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடந்தது. 3  மாநிலங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா விதிமுறைகளை  பின்பற்றி வாக்களித்தனர். உத்தரபிரதேசத்தில் சில வாக்குச்சாவடிகளில்  மின்தடை ஏற்பட்டதால்,  தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. ஒருசில  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால், அவை  சரிசெய்யப்பட்டு தாமதமாக  வாக்குப்பதிவு தொடங்கியது. இத்தேர்தலில்  ஆளுநர், முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர்  ஜனநாயக கடமையை ஆற்றினர். கோவாவில் அம்மாநில ஆளுநர் பி.எஸ்.தரன் பிள்ளை  தலீகாவோவில் உள்ள  வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.  உத்தரகாண்டில்  அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி,  காதிமாவில் வாக்களித்தார். கோவாவில்  அம்மாநில முதல்வர் பிரமோத் சவந்த் வாக்களித்தார்.  உத்தரபிரதேசத்தில் உள்ள   ராம்பூர் வாக்குச்சாவடியில், ஒன்றிய பாஜக அமைச்சர் முக்தார் அப்பாஸ்  நக்வி  வாக்களித்தார்.3 மாநிலங்களில் வாக்குப்பதிவு  முடிந்தபின், வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு, அந்தந்த  மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ்  பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. கோவாவில் 78.94% வாக்குகளும், உத்தரகாண்டில் 62%  வாக்குகளும், உத்தரபிரதேசத்தில் 60.44% வாக்குகளும் பதிவானது. பதிவான  வாக்குகள் அடுத்த மாதம் 10ம் தேதி எண்ணப்படுகிறது. 3 மாநிலங்களிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் மற்றும்  கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் எந்த அசம்பாவித சம்பவங்களும் இன்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.விதிமீறிய உத்தரகாண்ட் முதல்வர் உத்தரகாண்டில் உள்ள காதமாவி வாக்குச்சாவடியில் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். அப்போது அவரும், அவரது மனைவியும் பாஜவின் தாமரை சின்னம் பதித்த சால்வையை அணிந்திருந்தனர். மாநில முதல்வரே, தேர்தல் விதியை மீறி செயல்பட்டதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.* கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கருக்கு பாஜ சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர் தனது தந்தையின் தொகுதியான பனாஜியில் சுயேச்சையாக களமறிங்கி உள்ளார்.* 3 மாநிலங்களில் 165 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 2.95 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.* உத்தரகாண்டில் கேதர்நாத் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜக்கி பகவான் மற்றும் சிலாண்ட் கிராமங்கள் இந்த தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளன. தங்களது கிராமங்களுக்கு சரியான சாலை வசதி செய்து தரப்படாததால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.