உத்தரகாண்ட் தேர்தல் 2022: 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல்! வாக்குப் பதிவு தொடங்கியது!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.
உத்தரகாண்டில் 13 மாவட்டங்களில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 632 வாக்காளர்கள் போட்டியிடுகிறார்கள். 81 லட்சம் வாக்காளர்கள் தகுதியானவர்களாக அறியப்படுகிறார்கள்.
2000 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் உருவான பிறகு நடக்கும் 5 ஆவது சட்டசபை தேர்தல் இதுவாகும். இங்கு முதல்வர் புஷ்கர் சிங் தமி, அமைச்சர்கள் சத்பால் மகாராஜ், சுபோத் உனியால், அரவிந்த் பாண்டே, தன் சிங் ராவத், ரேகா ஆர்யா, பாஜக தலைவர் மதன் கவுசிக் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

இந்த தேர்தலில் போட்டியிடும் பிரபலங்கள் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், முன்னாள் அமைச்சர் யாஷ்பால் ஆர்யா, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கணேஷ் கோடியால், எதிர்க்கட்சித் தலைவர் பிரீத்தம் சிங் உள்ளிட்டோர் ஆவர்.
உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த 5 ஆண்டுகளில் 3 முதல்வர்களை மாற்றியுள்ளது பாஜக. திராத் சிங் ராவத், திரிவேந்திர சிங் ராவத் ஆகியோருக்கு பின்னர் 3 ஆவது முதல்வராக புஷ்கர் சிங் தமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முறை பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர் தமி, ஆம் ஆத்மி சார்பில் கலோனல் அஜய் கோதியால் முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார். இவரது பின்புலம் மற்றும் மக்களிடம் நன்மதிப்புடன் ஆம் ஆத்மி தேர்தலை சந்திக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு கேதார்நாத் வெள்ள பாதிப்பின் போது மறுசீரமைப்பிற்காக இவர் முக்கிய பங்காற்றினார்.
கோவா சட்டசபைத் தேர்தல் 2022: 4 முனை போட்டி.. வாக்குப் பதிவு தொடங்கியது!
முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் இதுவரை முடிவு செய்யவில்லை. கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரகாண்டில் 70 தொகுதிகளில் 57 தொகுதிகளில் பாஜக வென்றது. காங்கிரஸ் வெறும் 11 தொகுதிகளில் வென்றது. சுயேச்சை வேட்பாளர்கள் இருவர் வென்றனர். உத்தரகாண்ட் சட்டசபையின் பெரும்பான்மை பலம் 36 ஆகும். பாஜக, காங்கிரஸ் மட்டுமல்லாமல் ஆம் ஆத்மியும் உத்தரகாண்டில் காலடி எடுத்து வைக்கிறது.
உ.பி.தேர்தல் 2022: இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.. 55 தொகுதிகளுக்கு 586 பேர் போட்டி
70 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது ஆம் ஆத்மி. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் மக்களின் தேவைகளை காங்கிரஸும் பாஜகவும் பூர்த்தி செய்யவில்லை என ஆம் ஆத்மி தேர்தல் பிரச்சாரங்களில் குற்றம்சாட்டியுள்ளது. 8.624 இடங்களில் 11,697 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்முறையாக 101 வாக்குச்சாவடிகளில் பெண்கள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் இந்த வாக்குச் சாவடிகளுக்கு சகி என பெயரிடப்பட்டுள்ளது. அது போல் மாற்றுத் திறனாளிகளாக உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்டோருக்காக 6 வாக்குச் சாவடிகள் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.