ராஜபாளையம் : ராஜபாளையம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்மழை பெய்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இன்னும் ஆற்றுப்பகுதிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இப்பகுதியில் தொடர் விவசாயம் செய்வதற்கான மழைநீர் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் குடிநீருக்கு தேவையான அளவு தண்ணீர் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “ ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் மழைநீரானது ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் அதிக அளவு நெல் பயிரிட்டு வருகின்றனர். ஆனால், அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் குளம், கண்மாய்கள் தூர்வாரப்படுவதில்லை. மேலும் கரைகள் உயர்த்தப்படவில்லை. இதன் காரணமாக மலையில் இருந்து கிடைக்கும் மழைநிரை தேக்குவதில் சிரமம் உள்ளது. இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு ஆற்றில் அணை கட்டவும், கண்மாய், குளங்களை தூர்வாரி மழைநீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
