கர்நாடகாவில் பள்ளிகள் திறப்பு: ஹிஜாப் அணிந்துவந்த மாணவி; அனுமதி மறுத்த டீச்சர்! பெற்றோர் வாக்குவாதம்
மாண்டியா: கர்நாடகா மாநிலம் மண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குள் வந்ததும் ஹிஜாப்பை அகற்றுவதாக பெற்றோர் கூறியும் அதனை ஏற்க ஆசிரியை மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தது. இந்து மாணவிகள் காவித்துண்டு அணிந்து வரவே போராட்டங்கள் வெடித்தன. ஒரு கல்வி நிறுவனத்தில் தேசிய கொடிக்கம்பத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது.
ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவில் 10ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறப்பு – உடுப்பியில் 144 தடை

இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்து வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை. இந்த விவகாரம் மாநில உயர்நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்தவித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்டது.

கடந்த வாரம் விடுமுறைக்கு பிறகு கர்நாடகாவில் 10ம் வகுப்பு வரை இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் பல மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளிக்கு வந்தனர். மண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குள் வந்ததும் ஹிஜாப்பை அகற்றுவதாக பெற்றோர் கூறியும் அதனை ஏற்க ஆசிரியை மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பள்ளி வாசலில் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வீடியோ வெளியாகியுள்ளது.
ஹிஜாப் பிரச்னை உருவான உடுப்பி மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளைச் சுற்றியும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் 19ஆம்தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உடுப்பி மாவட்ட காவல்துறை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.