குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 – இணையத்தில் வைரலாகும் விண்ணப்பம்!

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை விவகாரத்தில் முதல்வரின் பெயரால் முறைகேடு நடத்த அனுமதிக்கக் கூடாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான
மு.க.ஸ்டாலின்
, கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், திண்டுக்கல்லில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், விரைவில் மகளிர் உரிமை தொகையான மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்டு விண்ணப்பம் ஒன்று வைரலாகி வருகிறது. அத்துடன் விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 – முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு!

இந்நிலையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பக்கத்தில் தெரிவித்து உள்ளதாவது:

தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அவை அரசு விண்ணப்பமாகத் தெரியவில்லை.

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை; பயனாளிகள் தேர்வுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை; விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு ஒரு தரப்பினர் விண்ணப்பத்தை வினியோகித்து வருகின்றனர். அதன் பின்னணியில் முறைகேடு செய்யும் நோக்கம் இருக்கலாம்.

இந்த மோசடிக்கு முதலமைச்சரின் பெயர் பயன்படுத்தக்கூடாது; விண்ணப்ப வினியோகத்தை தடுக்க வேண்டும். குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் வினியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மோசடியாக வினியோகிப்பவர்களை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.