தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க தடை இல்லை!

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை, சிபிஐ விசாரிக்க தடை இல்லை என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யாவை, மதம் மாறும்படி கூறி வற்புறுத்தியதாலும், தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாலும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக லாவண்யா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அவரது மரணத்திற்கு நீதி கேட்டு சமூக வலைளங்களில் பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பதிவிட்டனர். தொடர்ந்து மதம் மாறும்படி வற்புறுத்தியதால் லாவண்யா தற்கொலை செய்ததாக அவரது சித்தி சரண்யா குற்றம்சாட்டினார். லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை – பரிதவிக்கும் மாணவர்கள்!

இதற்கிடையே இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மாணவி தற்கொலை வழக்கை, சிபிஐ அமைப்புக்கு மாற்றி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரைணக்கு மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட நபர் இந்த அமைப்பு தான் விசாரிக்க வேண்டும் என கோர அதிகாரம் இல்லை என்றும், ஒரு வழக்கை சிபிஐக்கு மாற்றும் அதிகாரத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள தவறி உள்ளதாகவும், மாணவி மரண விவகாரம் வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

திமுகவுக்கு அடுத்த நெருக்கடி – சாட்டையை சுழற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி?

இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி, சிபிஐ அமைப்பு தொடர்ந்து விசாரிக்கும் என்றும், சிபிஐ விசாரணை உத்தரவை கவுரவ பிரச்னையாக தமிழக அரசு கருத வேண்டாம் என்றும், கட்டாய மதமாற்றம் தொடர்பான புகார்களை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை சிபிஐ அமைப்பிடம் ஒப்படைக்கும்படியும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, இந்த வழக்கில் மாணவியின் தந்தை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.