தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை முன்னாள் தலைமை செயலர், முன்னாள் டிஜிபி ஆஜராக சம்மன்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் விசாரணையில் ஆஜராக முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா  வைத்தியநாதன், முன்னாள் டிஜிபி டிகே.ராஜேந்திரன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி சம்பவத்தில் 13 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தமிழக அரசு நியமித்த ஒரு நபர் ஆணையம் தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணை நடத்தி வருகிறது. தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இதுவரை நடந்த 35 கட்ட விசாரணையில் 1042 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த மாதம் முதல் துப்பாக்கி சூடு தொடர்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆணையத்தின் 36வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இன்று  நடக்கிறது. இதில் ஆஜராகுமாறு முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.