ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அலுவலகத்திற்கு சொந்தமான குடோனில் ஏற்பட்ட தீயை 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். தாலுகா அலுவலகம் அருகே பழைய இரும்பு குடோன் அமைந்துள்ளது. இதில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள், 20 ஆண்டுகளுக்கு முந்தய ஆவணங்கள், மணல் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், உரிமம் கோராத இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், வாக்குப்பதிவு பெட்டிகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. தற்போது குடோன் பராமரிக்கப்படாததால் புதர்மண்டி கிடக்கிறது.இந்த குடோனில் இரவு திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகி சாம்பலாகின. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு படையினரின் துரித நடவடிக்கையால் அருகில் உள்ள கிளை சிறை மற்றும் நீதிமன்ற கட்டிடங்கள் ஆகியவை விபத்தில் இருந்து தப்பியது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
